மோடியின் ராஜதந்திரம்: வீட்டுல புலி, வெளியில எலி

Published On:

| By Minnambalam Desk

Modi govts foreign policy

சுஷாந்த் சிங்

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் வலுவான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக அரசு உள்நாட்டில் கூறினாலும், கள யதார்த்தங்கள் மிகவும் வேறுபட்டவை. இந்திய-சீன எல்லை இயல்பு நிலையில் இல்லை, மோதல் அற்றதாகவும் இல்லை.

ADVERTISEMENT

மன்மோகன் சிங் பிரதமரான 2004இலிருந்து, இந்தியாவையும் சீனாவையும் இணைத்து, “சிந்தியா” (Chindia) என்ற சொல் மேற்கத்திய ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆசியாவின் பொதுவான லட்சியத்தின் அடையாளமாக அது சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமடைந்தது. பண்டைய நாகரிகங்கள் இரண்டும் இணைந்து வளர்வதைப் பற்றிப் பலரும் கவித்துவமாகப் பேசினார்கள்.

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று, தனது ‘கடுமையான இராஜதந்திரம்’ பற்றிப் பெரிதாக முழக்கமிடுவதற்கு முன்பு இருந்த நிலை இது. இன்று, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன. இந்தியா, சீனாவுக்குச் சவால் விடும் நாடாக இல்லாமல், சீனாவின் வலிமை குன்றிய அண்டை நாடாகக் கருதப்படுகிறது. இந்திய-சீன உறவில் இப்போது கூட்டாண்மை இல்லை; சமநிலையற்ற தன்மையே உள்ளது. பீஜிங் இப்போது வாஷிங்டனுக்கு இணையான நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

எல்லையில் நெருக்கடி, இருதரப்பு உறவில் சங்கடம்

Modi govts foreign policy

சமீப மாதங்களில், மோடி அரசாங்கம் பீஜிங்கிற்கு அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக அனுப்பியுள்ளது. இது ஆகஸ்ட்-செப்டம்பரில் மோடியின் சீனப் பயணத்திற்கு அடித்தளம் அமைப்பதாக இருக்கலாம். ராஜ்நாத் சிங், எஸ். ஜெய்சங்கர், அஜித் தோவல், விக்ரம் மிஸ்ரி ஆகியோரின் இந்தப் பயணங்கள், சர்ச்சைக்குரிய லடாக் எல்லையில் கடந்த அக்டோபரில் எட்டப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் “உறவுகளை நிலைப்படுத்தவும், மீட்டெடுக்கவும்” நடந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஆனால், இந்த இராஜதந்திர நகர்வுகள் சமத்துவத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மோடியின் 11 ஆண்டு கால ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் பதற்றமான மனநிலையை – ஒருவேளை பலவீனத்தை – வெளிப்படுத்துகின்றன. எல்லைப் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக உள்நாட்டில் வலிமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், கள யதார்த்தங்கள் மிகவும் அப்பட்டமானவை. இந்திய-சீன எல்லை இயல்பு நிலையில் இல்லை, மோதல் அற்றதாகவும் இல்லை.

மேலும், 2020இல் எல்லை நெருக்கடி தொடங்கிய பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நியாயமானதொரு முன்மொழிவை முன்வைத்தார். எல்லை இயல்பு நிலையில் இல்லாவிட்டால் சீனாவுடனான இருதரப்பு உறவுகள் இயல்பாக இருக்க முடியாது என்றார். அந்தப் பேச்சு இப்போது வெற்றுச் சத்தமாகத் தெரிகிறது. அக்டோபர் புரிந்துணர்வுக்குப் பிறகு, எல்லை நிலைமை கல்வான் சம்பவத்திற்கு முந்தைய நிலைமைக்குக்கூடத் திரும்பவில்லை. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் பல பகுதிகளில் முக்கிய இடையக மண்டலங்கள் இந்தியப் ரோந்துகளுக்கு எட்டாமல் இருக்கின்றன. கிழக்கு லடாக்கில் இந்தியா கூடுதல் படைகளை நிறுத்துதல் தொடர்கிறது. இது இந்திய இராணுவம் ரகசியமாகச் சமாளிக்கும் படைக் குறைபாட்டை மேலும் அதிகரிக்கிறது. 

அருணாச்சலப் பிரதேசத்தில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீன ரோந்துகள் அனுமதிக்கப்படுகின்றன என்ற செய்திகள் அதிகாரபூர்வமாக மறுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தனது வருடாந்தர செய்தியாளர் சந்திப்பில், ரோந்துப் பணிகள் குறித்த முடிவுகள் உள்ளூர்த் தளபதிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன என்று கூறி இராணுவத் தளபதி அந்தக் கேள்வியைத் தவிர்த்தார். இந்தியாவின் எல்லைகளின் புனிதத்தன்மை இராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குரிய விஷயம் என்பது போலவும், இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைமைக்கு அது ஒரு கவலை அல்ல என்பது போலவும் இது உள்ளது.

பணிந்து நிற்கும் மோடி அரசு

Modi govts foreign policy

மோடி அரசு தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தன்னை வலுவான அரசாக முன்னிருத்திக்கொள்கிறது. ஆனால், பீஜிங்கின் தொடர்ச்சியான ஆதிக்கம் பெரும் சங்கடமாக மாறியுள்ளது. இருதரப்பு உறவில் சீனாவின் கையே இப்போது உயர்ந்துள்ளது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்திய அதிகாரிகள் அடுத்தடுத்து சீனாவுக்கு ஓடிக்கொண்டிருப்பதால், சீனா வசதியாகக் கருதும் எந்த நிபந்தனைகளின் கீழும் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவரும் அவசரத்தில் மோடி அரசு இருப்பதாகத் தோன்றுகிறது.

எல்லைப் பகுதியின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது சீனா இந்தியாவுக்கு அளித்துவரும் அழுத்தத்தின் ஒரு பகுதி மட்டுமே. வர்த்தகம், தொழில்நுட்பத்தில், இந்தியா சார்புநிலையை எதிர்கொள்கிறது. இது மோடி அரசாங்கத்தின் ‘ஆத்மநிர்பரதா’ (தற்சார்பு) முழக்கத்தைக் கேலி செய்கிறது. இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்குத் தேவையான முக்கியமான அரிய மண் தாதுக்களை சீனா நிறுத்திவிட்டது. புல்லட் ரயில் திட்டத்திற்கான சுரங்கத் துளையிடும் இயந்திரங்கள், டிஏபி போன்ற உரங்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள முக்கிய பொறியியல் நிபுணர்கள்கூட சீனாவின் தடைகளை எதிர்கொள்கிறார்கள். 

சீன முதலீடுகளைத் தடுப்பதற்கோ அல்லது இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவை இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட செல்வாக்கையும், ஒப்பீட்டளவிலான பலவீனத்தையும் மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தியத் தொழிலுக்கும் உள்கட்டமைப்புக்கும் விவசாயத்தின் செயல்பாட்டிற்கும் சீனாவின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருப்பதால், அதன் பிடி முன்னெப்போதையும் விட இறுக்கமாகிறது.

குறைந்துவரும் இந்தியாவின் முக்கியத்துவம்

இராஜதந்திர ரீதியாக, சீனாவின் சமீபத்திய முத்தரப்பு சோதனைகள் – ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்; பாகிஸ்தான்-வங்கதேசம் – தெற்காசியாவில் இந்தியச் செல்வாக்கைக் குறைப்பதற்கான அதன் ஆர்வத்தைக் காட்டுகின்றன. பாகிஸ்தானை ஓரங்கட்ட, மோடி அரசாங்கம் சார்க்கை (SAARC) நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஆனால் அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பும் பங்களாதேஷில் நடந்த சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு செத்துக்கொண்டிருக்கிறது. நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி செப்டம்பரில் இந்தியாவிற்கு வரவுள்ளார். ஆனால் அவர் 10 மாதங்களுக்கு முன்பே பீஜிங்கிற்குச் சென்றுவிட்டார். ஒரு நேபாளப் பிரதமர் பதவி ஏற்ற பிறகு தில்லியைத் தனது முதல் சந்திப்பாகத் தேர்ந்தெடுக்காதது இதுவே முதல் முறை. பூடான் சீனாவுடனான எல்லை ஒப்பந்தத்திற்குத் துடிக்கிறது, இந்திய அழுத்தத்தால் மட்டுமே அது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் நிறுத்திவைக்க முடியும் என்பது யாருக்கும் தெரியாது. தெற்காசியத் தலைநகரங்களிலிருந்து சீனாவுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்போது மோடியின் ‘அண்டை வீட்டுக்கு முன்னுரிமை’ என்ற முழக்கம் வெற்று முழக்கமாகத் தோன்றுகிறது.

சீனாவின் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், அது இந்தியர்களுக்கான விசாவை ஒருதலைப்பட்சமாக வழங்கத் தொடங்குகிறது. மேலும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா விசா வழங்கி அல்லது இருதரப்பு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கும்வரை காத்திருக்காமல் இந்திய பக்தர்களுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குகிறது. பாகிஸ்தான் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா கூறியது. இருதரப்புப் பிரச்சினையைப் பொது அரங்கிற்குக் கொண்டுவரக் கூடாது என்று இந்தியாவிற்கு அது அறிவுரை கூறவும் முடியும். அது மட்டுமல்ல. திபெத் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும், தலாய் லாமாவின் பிறந்தநாளில் மோடிக்கு எச்சரிக்கை விடுப்பதன் மூலமும், சமீபத்திய இராணுவ மோதலின்போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதன் மூலமும், இருதரப்பு ஈடுபாட்டின் விதிமுறைகளைச் சீனா வடிவமைக்கிறது. இந்தியாவின் பதில்களோ பெரும்பாலும் சம்பிரதாயமானவையாகவே இருக்கின்றன, அல்லது பதிலே சொல்வதில்லை.

மோடி அரசின் கையறு நிலை

Modi govts foreign policy

பல்வேறு அடுக்குகளில் சீனா முன்வைக்கும் இந்தச் சவால்களுக்கான மோடி அரசாங்கத்தின் உண்மையான எதிர்வினை சீனாவுக்கு ஆதரவாகவே உள்ளது. 2023இல் ஜெய்சங்கர், “பாருங்கள், அவர்கள் ஒரு பெரிய பொருளாதாரம். நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கூறியது புவிசார் அரசியல் நுண்ணறிவு என்பதைவிட, மோடியின் பலவீனத்தை வெளிப்படுத்தும் ஒரு அறிவிப்பாகும். அது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. சீனா மோடியின் தைரியத்தைச் சோதித்தது. மோடி அதற்கு அடிபணிந்தார். சீனா விதிக்கும் நிபந்தனைகளின் பேரில் சீனாவுடனான உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருப்பதையே ஜெய்சங்கரின் பேச்சுக்கள் காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டிற்கு இரண்டு காரணிகள் தூண்டுகோலாக அமைகின்றன. முதலாவதாக, ஒரு புதிய சகாப்தத்தைப் பற்றிப் பேசினாலும், மோடியின் கீழ் இந்தியா உண்மையான உள்பலத்தை உருவாக்கத் தவறிவிட்டது. பாதுகாப்பு நவீனமயமாக்கல் சீரற்றதாகவும், வளங்கள் அற்றதாகவும், அரசியல் ஆதரவு இல்லாமலும் உள்ளது. பொருளாதாரம் வெளி அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடியதாகவே உள்ளது. அதி-தேசியவாதப் பிரச்சாரப் பிரச்சாரத்தை வைத்துக் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களில் உள்ள போதாமையைச் சரிக்கட்ட முடியாது. இரண்டாவதாக, அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் அதிகாரச் சமநிலையை உருவாக்கும் முயற்சி பலவீனமானது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாபத்தை மட்டுமே நோக்குபவர்; மோடி அவருடன் நடத்திய இரண்டு தேர்தல் கூட்டங்களைப் பற்றியெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. அவரது நிர்வாகம் இந்தியாவை இந்தோ-பசிபிக் பகுதியில் சில வரம்புகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. ஆனால் சீனாவுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மனநிலையில் அமெரிக்கா இல்லை.

வெளியுறவுக் கொள்கையின் தோல்வி 

Modi govts foreign policy

இவையனைத்தும் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஒரு கசப்பான அனுபவமாக அமைகின்றன. பொருளாதார வளர்ச்சிக்குச் சீனாவின் விருப்பத்தையும், மூலோபாய ஆதரவுக்கு அமெரிக்காவையும் இந்தியா அதிகமாகச் சார்ந்துள்ளது. ஆனால் இருவராலும் கைவிடப்படும் அபாயத்தில் உள்ளது. ஜெய்சங்கரின் நாவன்மையோ தோவல் பற்றிய பாலிவுட்டின் புனித நூல்களோ, மோடி பின்பற்றும் போலியான ஆளுமை மற்றும் நிகழ்வு அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையிலிருந்து எழும் தோல்வியை ஈடுசெய்ய முடியாது. பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கும் சில சன்மானங்கள், சீனாவுக்கு எதிராக நிற்கவோ அல்லது டிரம்ப்பை எதிர்கொள்ளவோ தேவையான வலிமையை மோடிக்குக் கொடுக்காது.

ஒரு வகையில் இது 1962 தோல்விக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு எதிர்கொண்டதைக் காட்டிலும் மோசமான சூழ்நிலையாகும். சீனா ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தம் அறிவித்த அதே வேளையில், இந்தியாவின் மீது நிலப்பரப்பு சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்தது. நேரு அவை அனைத்தையும் நிராகரித்தார். இருப்பினும், மோடியின் ஆட்சியின் 12ஆவது ஆண்டில், இந்தியாவால் உள் பலத்தை உருவாக்க முடியவில்லை. அர்த்தமுள்ள வெளிப்புற ஆதரவையும் பெற முடியவில்லை. சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் அது உள்ளது. சீன நிபந்தனைகளின் பேரில் இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.

மோடியின் பதவிக்காலம், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் இந்தியாவின் நிலையைச் சுருக்கிவிட்டது. இந்தியா விதிமுறைகளை நிர்ணயிக்கும் நிலையில் இல்லை. எல்லைகள் சமரசம் செய்யப்பட்டு, செல்வாக்கு அற்றுப்போன நிலையில், இந்தியா இப்போது சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது. பிறரைச் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. வார்த்தையிலோ செயலிலோ சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியவில்லை. 

இது வலிமை அல்ல; சரணாகதி.

சுஷாந்த் சிங் யேல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்.

நன்றி: தி டெலிகிராஃப் இந்தியா

*

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share