ரவிக்குமார் Taking away the right to vote
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 326, எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயதுக்குக் குறையாத மற்றும் அரசமைப்புச் சட்டத்தாலோ அல்லது எந்தவொரு சட்டத்தினாலோ சில காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்படாத ஒவ்வொரு குடிமகனும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு என்று அது கூறுகிறது.
தேர்தலில் வாக்களிக்கும் இந்த உரிமையானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஒருவருக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்பது அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமத்துவத்தின் செயல்பாட்டு வடிவமாகும். சமூக ஏற்றத் தாழ்வை வலியுறுத்தும் சனாதனவாதிகளுக்கு சமத்துவத்தை உருவாக்கும் எந்தவொரு சட்டமும் ஏற்புடையதல்ல. அதனால் அத்தகைய சட்டங்களையும், நடைமுறைகளையும் அவர்கள் மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். தேர்தல் முறையில் ஒன்றிய பாஜக அரசு செய்ய முயலும் மாற்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே அழிப்பதாக உள்ளன.
மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் புதிதாக லட்சக் கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்த்துத் தேர்தல் முடிவை மாற்றினார்கள். பீகாரிலோ தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரிந்த தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டுரிமையைப் பறிப்பது, போலி வாக்காளர்களைச் சேர்ப்பது என்ற தந்திரத்தைக் கையாளுகிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 326, ‘இந்திய குடிமக்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்க முடியும்’ என்று கூறுகிறது. ஆனால் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கு அது மட்டுமே நிபந்தனை அல்ல. ‘ வாக்காளராகப் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள்’ எவை என்பதை 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் வரையறுத்துள்ளது. அந்தச் சட்டத்தின் பிரிவு 19, “தகுதிபெறும் தேதியில் 18 வயதுக்குக் குறையாத, ஒரு தொகுதியில் வழக்கமாக வசிக்கும் ஒவ்வொரு நபரும், அந்தத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய உரிமை பெறுவார்கள்” என்று கூறுகிறது.
52 லட்சம் வாக்குரிமை பறிப்பு!

1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் படிவம் 6 இன் கீழ், வாக்காளராகப் பதிவு செய்வதற்கு, ஒரு விண்ணப்பதாரர் தான் இந்தியக் குடிமகன் என்பதற்கான சுயச் சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் ஒருவர் இன்று குடியுரிமை குறித்த சுயச் சான்றிதழை அளித்து வாக்காளராகத் தன்னைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
ஆனால், பீகாரில் ஒருவர் வாக்காளராக இருக்க வேண்டுமென்றால் தனது குடியுரிமையை நிரூபிப்பதற்கு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும். இதற்கு முன் எந்தத் தேர்தலிலும் இப்படியொரு நிபந்தனை விதிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய நிபந்தனை காரணமாக பீகாரில் சுமார் 52 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் குடியுரிமையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
ஒருவரது வாக்குரிமையை நீக்குவதற்கு 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 22 இல் சில நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.”… சம்பந்தப்பட்ட நபர் அந்தத் தொகுதியில் சாதாரணமாக வசிப்பதை நிறுத்திவிட்டார் அல்லது அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அவருக்கு உரிமை இல்லை என்ற அடிப்படையில்…. எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், தேர்தல் பதிவு அதிகாரி சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக தகவல் தெரிவித்து அவரது விளக்கத்தைக் கேட்க வேண்டும். அதற்கு நியாயமான வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்” என அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட முன்னோட்டம்
பீகாரில் ஏற்கனவே வாக்காளராகப் பதிவுசெய்திருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கும் சுமார் 52 லட்சம் பேரும் மேற்குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் நடவடிக்கைக்கு ஆளாகவில்லை. அவர்கள் விளக்கமளிக்க எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. அந்தச் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து ஒரு சாதாரண நிர்வாக உத்தரவின் மூலம் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான முன்னோட்டமாகும்.
24.06.2025 அன்று, தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தை (ECI No: 23/2025-ERS (Vol.II) வெளியிட்டு, நாடு முழுவதும் ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) நடத்த உத்தரவிட்டது. இது முதலில் பீகாரில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 இன் விதி 25-ன் கீழ் SIR என்ற கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த உத்தரவு சட்டத்திட்டங்களை மீறி, ஏற்கனவே 2003 ஆம் ஆண்டின் மூல வாக்காளர் பட்டியல் (mother roll) மற்றும் அதற்குப் பிந்தைய சுருக்கமான திருத்தங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களிடமிருந்து புதிய வாக்காளர் சேர்ப்புப் படிவங்கள் (Enumeration Forms – EF) மற்றும் கூடுதல் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் (ECI/PN/233/2025), விதி 25(2), விதி 8 மற்றும் படிவம் 4 ஆகியவற்றின் கீழ் வாக்குச்சாவடி மட்டத்திலுள்ள அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று சோதனை செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பீகார் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சட்டத்திற்கு உட்பட்ட படிவங்களைத் தவிர்த்து, ஒரு சட்டப்பூர்வமற்ற வாக்காளர் சேர்ப்புப் படிவத்தை (EF) அறிமுகப்படுத்தி, விதிகளில் கூறப்படாத ஆவணங்களை வாக்காளர்கள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. இது சட்டத்தின் நடைமுறைக்கு நேரடி முரண்பாடாகும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, வாக்காளர் சேர்ப்புப் (EF ) படிவங்களை வழங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் வரையான முழுப் பணியை 90 நாட்களில் முடிக்க வேண்டும் என ஒரு அநீதியான காலக்கெடுவை விதித்துள்ளது. அதில் வாக்காளர் சேர்ப்புப் படிவம் (EF ) விநியோகத்திலிருந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கிடையே சுமார் 35 நாட்களே வழங்கப்பட்டுள்ளன. சுமார் 7.9 கோடி வாக்காளர்கள் கொண்ட பீகார் மாநிலத்திலுள்ள ஆவணங்களை வைத்திருப்பதில் பின் தங்கிய நிலையில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறை, குறிப்பாக ஏழைகள், கல்வியறிவற்றோர், பெண்கள், எஸ்சி, எஸ்டி சமூகத்தினர், புலம்பெயர்ந்த மக்கள் போன்றோருக்கு மிகுந்த சுமையாக இருக்கிறது.
24.06.2025 அன்று வெளியிடப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்ட “பயிற்சி வழிகாட்டி”யில், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEOs) தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs), உதவித் தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs), வாக்குச்சாவடி மட்டத்திலுள்ள அலுவலர்கள் (BLOs ) மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் காலிப் பணியிடங்களை நிரப்பி, தகவல் தொழில்நுட்பம் உட்பட அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நூலகர்கள் போன்ற பொதுப் பணியாளர்களுக்குப் பதிலாக, பயிற்சி இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் விரைவாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவே பரபரப்பும் குழப்பமும் ஏற்படுத்தி, வாக்காளர் பட்டியல் திருத்துவதில் முறைகேடுகளை உருவாக்கியுள்ளது.
பீகாரிலிருந்து கிடைக்கும் தகவல்களின் படி, ஏற்கனவே பட்டியலில் உள்ள வாக்காளர்களிடமிருந்து சமர்ப்பிக்கப்படும் வாக்காளர் சேர்ப்புப் படிவங்கள் (EF), புது ஆவணங்கள் இல்லையென்றால், வாக்குச்சாவடி மட்ட அலுவலர்களால் (BLO) நிராகரிக்கப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தாலும் ஏற்கப்படுவதில்லை. இது, ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் EF-ஐ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டுமென்றும், உரிய வாக்காளர் பட்டியலின் பிரதியொன்றை இணைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்கு எதிரானதாகும். இந்த மாதிரியான குழப்பமான, முரண்பட்ட செயல்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 326-இல் உறுதிப்படுத்தப்பட்ட உரிமையை மறுப்பதாக
உள்ளன.
04.07.2025 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்ட ஒரு புதிய பத்திரிகை அறிக்கையில், ஆவணங்கள் இல்லாமலும்கூடப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும், ஆனால் பின்னர் சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இது ஏற்கனவே உள்ள வாக்காளர்களை மீண்டும் குடியுரிமையை நிரூபிக்க வற்புறுத்தும் தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கையை சட்டபூர்வமாக்க முடியாது. இது சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை உருவாக்கி, வாக்குரிமையை முடக்குகிறது .
இப்போது பீகாரில் நடப்பது அடுத்து 2026 இல் தேர்தலை சந்திக்கவுள்ள தமிழ்நாட்டிலும் விரைவில் அமல்படுத்தப்படலாம். எனவே தேர்தல் ஆணையம் கடந்த 24.06.2025 அன்று வெளியிட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். முன்பிருந்த முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். Taking away the right to vote