நடிகர்கள் வடிவேலு, அஜித், ரஜினி வந்தால் கூட கூட்டம் வரத்தான் செய்யும். அதனால் விஜயையும் என்னையும் கம்பேர் பண்ணாதீங்க என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நீங்கள் கட்சி ஆரம்பித்தபோது நிறைய கூட்டம் வந்தது. இப்போது கட்சியைக் கலைத்துவிட்டீர்கள். அதே நிலைதான் விஜய்க்கும் வருமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சரத்குமார்,“போகப் போகத் தெரியும். நான் கட்சியைக் கலைத்ததையும் விஜயையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். எனக்கு 28 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.1996-இல் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். அன்றிலிருந்து ஆட்சியாளர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தேன். அதன் பிறகு கட்சியைத் தொடங்கினேன்.
பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன், சட்டமன்றத்தில் இருந்துள்ளேன். அனுபவம் பெற்றவன் நான். அதனால் அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள். கூட்டம் எல்லோருக்கும் வரும்.
என் அன்புச் சகோதரர் வடிவேலுவிற்கும் தான் கூட்டம் வரும். பலமுறை சொன்னது தான். நாளை அன்புச் சகோதரர் அஜித் போனாலும் கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினிகாந்த் சார் போனாலும் அதே கூட்டம் தான் வரும்.
கூட்டம் வரும், ஆனால் அவர்கள் வாக்களிப்பார்களா என்பதை மக்கள்தான் கடைசியில் முடிவெடுக்க வேண்டும். எதற்காக வாக்களிக்கப் போகிறோம்? எந்தக் கொள்கைக்காக வாக்களிக்கப் போகிறோம்? இவர்கள் வந்தால் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியுமா? என சிந்தித்துச் செயல்படுவது மக்கள் கையில்தான் உள்ளது.
அப்படியென்றால் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா என்று நீங்கள் திரும்பி என்னை கேட்கலாம். நான் அப்படி இல்லை. நான் தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருடனும் கலந்துபேசி தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொண்டேன். நான் கட்சியைக் கலைக்கவில்லை; இணைந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.
