பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று (அக்டோபர் 6 ) காலை அவருக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் வைகோ, ராமதாஸ் இருவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள்.கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைகோவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “அண்ணன் வைகோ உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்ததுமே நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இன்று மருத்துவமனைக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.