கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று (ஜனவரி 12, 2026) ஆஜரான நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், நேற்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். விசாரணை சுமார் 6-7 மணி நேரம் நீடித்தது.
பொங்கல் பண்டிகை காரணமாக அடுத்த கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பின் (ஜனவரி 15க்குப் பிறகு) மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார். எந்தத் தேதியில் மீண்டும் ஆஜராவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சிடி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்
