ராஜன் குறை
இந்திய தேர்தல் களம் என்பது மாநிலங்களில்தான் அமைந்துள்ளது. அது நாடாளுமன்ற தேர்தலே ஆனாலும் மாநில அளவிலான அரசியல் சமன்பாடுகளால்தான், முரண்களால்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இப்போது ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சி பீஹாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுகு தேசம் ஆகிய மாநில கட்சிகளின் ஆதரவில்தான் செயல்பட்டு வருகிறது.
இதில் என்ன பிரச்சினை என்றால் ஆட்சி அதிகாரம், நிதி மேலாண்மை அதிகாரம் எல்லாம் ஒன்றிய அரசில் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களோ மாநிலங்களில்தான் அரசியல் முரண்களத்தை உருவாக்கியுள்ளார்கள். மக்களின் நேரடி வாழ்வியல் தேவைகளான நில உடைமை, சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநில அரசின் கீழ்தான் உள்ளன. ஆனால் இவை அனைத்திலுமே ஒன்றிய அரசு பல்வேறு விதங்களில் தலையிடுகிறது.
ஒரு எளிமையான உதாரணம், சாகித்ய அகடெமி என்னும் இலக்கிய மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசின் அமைப்பில் இந்த ஆண்டு அரங்கேறியுள்ள ஒரு விநோதமான நிகழ்வு. அது ஆண்டு தோறும் இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு பரிசளிக்கிறது. இந்த ஆண்டு நடுவர் குழுக்களை அமைத்து, விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படப்போகும் நேரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு அதனை நிறுத்தி வைத்துள்ளது. காரணம் புதிய விதிமுறைகளை உருவாக்கப் போகிறார்களாம்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிவிட்டு, அடுத்த ஆண்டு புதிய விதிமுறைகள் படி வழங்கலாமே? ஏன் கடைசி நேரத்தில் விருதுகளை தடுத்து நிறுத்தவேண்டும்? குறிப்பாக தமிழ் மொழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் விருதுக்கு தேர்வாகி இருந்ததால் இந்த அப்பட்டமான அரசியல் தலையீடு திகைப்பளிக்கிறது.
இதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டு அரசு அற்புதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஒரு மாநில அரசு தேசத்தின் பல மாநிலங்களின் பண்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது தவறல்லவே? இதுதானே தேசிய ஒருமைப்பாடு? இதைத் தொடர்ந்து நாம் சிந்தித்தால் ஒவ்வொரு மாநில அரசும் இந்திய தேசத்திற்காக சிந்திப்பதுதான் உண்மையான கூட்டாட்சிக் குடியரசு என்பதை உணரலாம்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சி “ஓரே நாடு, ஒரே தேசம்” என்ற பெயரில் மாநிலங்களின் பண்பாட்டுத் தனித்துவத்தை மறுக்கிறது, எதிர்க்கிறது. மாநில அரசுகளுக்கு இறையாண்மையில் பங்கிருக்கிறது என்றாலே பாரதீய ஜனதா பேச்சாளர்கள் பதறுகிறார்கள். மக்களாட்சியில் இறையாண்மை மக்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் இறையாண்மையில் பங்கிருக்கிறது என்றால் அவர்கள் அதனை பிரிவினைவாதம் என்றுதான் புரிந்துகொள்கிறார்கள். இன்னமும் பேரரசு கால மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் இந்திய மக்களாட்சியின் தனித்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் இந்திய மக்களாட்சி என்னும் மகத்தான அத்தியாயம்
சுதந்திர இந்தியக் குடியரசின் வயது 76. வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் universal adult franchise செயல்படத்துவங்கி 75 ஆண்டுகளாகிறது. உலக வரலாற்றில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பல கட்சிகளுக்கு வாக்களித்து இத்தனை காலம் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்வதும், மக்கள் தங்கள் கோரிக்கைகள் ஓரளவாவது நிறைவேற்றப் பெறுவதும் இதுதான் முதல் முறை எனலாம்.
இதில் எத்தனை குறைகள், இடர்பாடுகள் இருந்தாலும் தேர்தல்கள் என்பவை தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு சவாலாக விளங்குவதும், ஆட்சியாளர்கள் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதும் முக்கியமானது. சமீபத்தில் நிகழ்ந்த தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பதும், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த ஐயங்களும் பெரும் கவலைகளைத் தோற்றுவித்தாலும் தேர்தல்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றன. பீஹார் மாநில தேர்தலில் வெற்றிபெற அனைத்து மகளிருக்கும் திடீரென பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்ததே ஒரு சான்று.
எத்தனையோ நாடுகளில் ராணுவ ஆட்சி வந்துவிடுகிறது. தேர்தல்கள் தள்ளிப் போகின்றன. இனக்கலவரங்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஒன்றிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல்களும், மாநில அரசுகளை அமைப்பதற்கான சட்டமன்ற தேர்தல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் பல நேரங்களில் வழக்குகளால், நிர்வாகப் பிரச்சினைகளால் ஒத்திவைக்கப்படுவது நடந்தாலும், அவையும் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது நாம் மக்களாட்சித் தத்துவம் குறித்து சிந்திக்க இந்தியா மிகப்பெரும் வாய்ப்பினை அளிக்கிறது என்பதை உணர வேண்டும். ஏனெனில் இந்திய சமூகம் என்பது அளப்பரிய பன்மை கொண்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாகத் துவங்கி, வளரும் நாடாகப் பரிணமித்து இப்போது உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இந்திய மக்களாட்சி அரசியல் பெருமளவு உதவியுள்ளது என்பதும் தெளிவாக உணரக்கூடிய, பல்வேறு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ள உண்மை.
அனால் இந்தியா ஒற்றை தேசிய அரசா அல்லது கூட்டாட்சிக் குடியரசா என்பதில் பலர் மனதிலும் தெளிவில்லை. அதற்கு முக்கிய காரணம் தேசிய கட்சிகள் என்ற கருத்தாக்கம். அது குறித்து நாம் பொறுமையாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையான கூட்டாட்சிக் குடியரசாக மாறும்.

தேர்தல் சார்ந்த மக்களாட்சியின் அடிப்படை
மக்களாட்சி சிறப்பாக இயங்க இரண்டு அம்சங்கள் தேவை.
ஒன்று மக்கள் தங்களை ஒரு தன்னுணர்வு கொண்ட முழுமையான மக்கள் தொகுதியாக உணரவேண்டும்.
அடுத்து அந்த முழுமையினுள் முரண்பட்ட சக்திகள் அணி திரட்டி தேர்தல் களத்தில் போட்டியிட வேண்டும்.
இந்த இரண்டுமே மாநில அளவில்தான் நடக்கின்றன. இந்தியர்கள் என்ற பொது அடையாளத்தை மக்கள் ஏற்றாலும், தேச பக்தி கொண்டாலும், ஒரு அரசியல் தொகுதியாக தங்களை மாநில அளவில்தான் உணர்கிறார்கள். தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் அடையாளங்கள் திட்டவட்டமானவை. அவற்றை விட்டுவிடுவோம். உத்திரப் பிரதேசம், பீஹார் ஆகியவற்றில் கூட அந்தந்த மாநில கட்சிகளே அரசியல் முரண் களத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனதா தளம் என்ற கட்சியிலிருந்து பிரிந்திருந்தாலும் உத்திரப் பிரதேசம் என்றால் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ்; பீஹார் என்றால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ் என்றுதான் அரசியல் களம் உருவாகிறது. பாஜக தலைவர்களும் மாநிலவாரியாகத்தான் உருவாகிறார்கள். ஹரியானா பாஜக தலைவர்கள் வேறு; ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் வேறு.
தேர்தல் ஆணையம் தேசிய கட்சி என்பதற்கான வரையறையை மிகச் சுலபமானதாகத்தான் வைத்துள்ளது. ஏதாவது நான்கு மாநிலங்களில் 6% ஓட்டுக்களும், நாடாளுமன்றத்தில் 4 உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) நாடாளுமன்றத்தில் 2% உறுப்பினர்களை (11 பேர்) மூன்று வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பெற்றிருக்க வேண்டும் (அல்லது) குறைந்தது நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வளவு எளிமையான வரையறை இருந்தும் ஆறு கட்சிகள்தான் அதிகாரபூர்வமாக தேசிய கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன சமாஜ் கட்சி, மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட கிழக்கு மாநிலங்களில் செயல்படும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை அவை. இவற்றில் பாஜக, காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் எப்போது வேண்டுமானால் அந்த தகுதியை இழக்கலாம் என்ற அளவு நூலிழையில் தகுதி பெற்றுள்ளவை. இவ்வளவு எளிமையான வரையறை இருந்துகூட 14 மாநிலங்களில்தான் தேசிய கட்சிகளே ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் உள்ளன.
வேறு பல மாநிலங்களில், குறிப்பாக உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஓரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில், தேசிய கட்சியும், மாநில கட்சியும் முரண்களத்தை வடிவமைக்கின்றன. பீஹார், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே மாநில அடையாளம், தன்னுணர்வு என்பதே அரசியலின் மையமாக உள்ளது.

இந்திய தேசம் என்ற ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தும் பாஜக தேர்தல்களில் மாநில தன்னுணர்வைத்தான் வலியுறுத்துகிறது என்பது மிக முக்கியமான அம்சமாகும். குஜராத்தில் குஜராத்தி பெருமிதம் என்பதை வலியுறுத்திதான் நரேந்திர மோடி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தார். ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக் ஒரு தமிழ்நாட்டு ஆட்சிப் பணி அதிகாரியை பதவி விலகச் சொல்லி தன் கட்சியில் பங்கேற்கச் சொன்னார் என்பதற்காக, பூரி ஜெகன்னாதர் ஆலயத்தின் காணாமல் போன பெட்டகத்தின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்று விட்டது என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
சமீபத்தில் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தமிழர் வாழும் பகுதியில் பிரசாரம் செய்யச் சென்ற தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை மும்பாய் ஒரு சர்வதேச நகரம், மராத்தியர்களின் நகரமல்ல என்று கூறியது பெரும் சர்ச்சையானது. சிவசேனாவின் கண்டனங்களை சமாளிக்க முதல்வர் ஃபட்னவிஸ் திணறிப்போனார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகளை உடைத்து, சமூக அமைப்புகளை கட்சிகளாக்கித் தொகுத்து, அணியமைத்து எப்படியாவது ஆட்சியில் பங்கேற்கவே பாஜக முயற்சி செய்கிறதே தவிர, இந்திய அடையாளத்தின் அடிப்படையில் அதனால் தேர்தல் வேலை பார்க்க முடியாது என்பதே அப்பட்டமான உண்மையாக இருக்கிறது. உதாரணமாக கர்நாடகா என்றால் லிங்காயத்து தலைவர்கள், வொக்கலிகா தலைவர்கள் என்று அணியமைக்கிறது. அப்படி அணி சேர்க்க முஸ்லீம் வெறுப்பை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது.
ஏன் மாநிலங்களே மக்களாட்சி களங்களாக உள்ளன?
இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய போது அது ஆங்கிலம் படித்த மேட்டுக்குடியினரின் குடிமைச் சமூக அமைப்பாகத்தான் தோன்றியது. அதிலே சிலர் ஆங்கிலேயர்களை உடனே நாட்டை விட்டு விரட்டவேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் கொண்டனர். பிறர் மெள்ள, மெள்ள இந்தியர்கள் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மராத்திய, வங்காள, தென்னாட்டு பார்ப்பனர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்த முன்னேறிய நிலவுடமை, வர்த்தக வகுப்பினரும் பங்கேற்றனர்.

காந்தி தலைமையேற்ற பிறகு அவர் வெகுஜன ஆதரவைத் திரட்டத் துவங்கினார். அவரது அரசியல் தரிசனமும், ஆகிருதியும், எளிமையும், மகாத்மா பிம்பமும் அதற்கு உதவியது. ஆனாலும் கூட கட்சி அமைப்பு பெரும்பாலும் வக்கீல்கள், நிலப்பிரபுக்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள் கையில்தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தேர்தல்கள் நடக்கத் துவங்கும்போதுதான் கட்சி அனைத்து மக்களையும் அமைப்பாகத் திரட்ட வேண்டிய அவசியம் வந்தது.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதோர் அணி சேர்க்கை, இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றின் பின்புலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உண்மையான வேர்மட்ட அணிசேர்க்கையை மேற்கொண்டது. காமராஜர் போன்ற வேர்மட்ட த்திலிருந்து வந்த தலைவர் காங்கிரஸில் முக்கிய பொறுப்பேற்றாலும், தமிழ்நாட்டு முதல்வரானாலும் அந்த கட்சியால் சாமானியர்களை அணி திரட்ட முடியவில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் சாமானியர்களின் கட்சியாகவே முதலிலிருந்தே உருப்பெறத் துவங்கியது. மக்களாட்சி வரலாற்றில் மிக முக்கியமான, அபூர்வமான பண்பாட்டு நிகழ்வாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி அமைந்தது; திராவிடத் தமிழர் என்ற வலுவான தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியை உருவாக்கியது.
மாநில அரசியல் முரண்களத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும், பிற மாநிலங்களிலும் மெள்ள மெள்ள வேர்மட்ட அரசியல் அணிசேர்க்கைகள் வலுவடையவே செய்தன. அதைவிட முக்கியமாக பல்வேறு பகுதிகளில் தனி மாநில கோரிக்கைகள் மக்கள் தொகுதிகளால் முன்னெடுக்கப்பட்டன. அவை மொழியடிப்படையிலும், பல்வேறு சமூகவியல் வரலாற்றுக் காரணிகள் அடிப்படையிலும் அமைந்தன.

மக்கள் போராட்ட த்திற்குப் பிறகே பல்வேறு மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தனி மாநில கோரிக்கையே பிரிவினைக் கோரிக்கை போலத்தான் பார்க்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் 1956-இல் உருவானபோது கூட மகாராஷ்டிராவும், குஜராத்தும் ஒரே மாநிலமாகத்தான் அமைக்கப்பட்டன. மீண்டும் சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் போராடியதால்தான் அவை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
சுதந்திர இந்தியாவில் போராடி அமைந்த முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திர மாநிலம் இருந்தாலும், அதன் ஹைதராபாத் நிஜாம் பகுதியும், மெட்றாஸ் பிரசிடென்ஸி பகுதியும் முழுமையாக இணையவில்லை எனலாம். நிஜாம் பகுதியில் தெலுங்கானா என்ற தனி மாநிலத்திற்கான கோரிக்கை எழுந்து நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. தொடர்ந்து தேர்தல் அரசியல் மக்களை அரசியல்மயப்படுத்தும்போது அது தெலுங்கானா மாநில தன்னுணர்வாக தீவிர வடிவம் எடுத்து பெரும் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது. இறுதியில் தனி மாநிலம் அமைக்கப்பட்டது.
உத்திரப் பிரதேசத்திலேயே உத்திராகண்ட் போராட்டத்தை முலாயம் சிங் யாதவ் ஒடுக்க முயன்றார். அது பலனளிக்கவில்லை. உத்திரப் பிரதேசம் நிர்வாக வசதியினால் உருவான மாநிலமாக இருந்ததே தவிர, அரசியல் தன்னுணர்வினால் உருவான மாநிலமாக இல்லை. அதில் மக்கள் பேசும் மொழிகளிலிருந்து சற்றே மாறுபட்ட இந்தி மொழி அரசு மொழியாகவும், ஊடக மொழியாகவும் இருப்பதாலும் அங்கே அரசியல் தன்னுணர்வு என்பது மாநிலத் தன்னுணர்வாக உருவாகவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. ஆய்வாளர்கள் அதனைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் வரலாறு
இந்திய தேசிய அடையாளத்தை கட்டமைத்த ஆதிக்க வகுப்பினர் என்று பார்ப்பன-பனியா கூட்டமைப்பைக் கூறுவார்கள். இந்திய வரலாற்றில் வெகுகாலமாகவே பேரரசு உருவாக்க முயற்சிகளில் பங்கேற்றவர்கள் பார்ப்பனர்கள். ஒரே நேரத்தில் பூசாரிகளாகவும், நிர்வாகிகளாகவும் இருந்ததால் அரசுருவாக்கத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை செய்து வந்தவர்கள். சமஸ்கிருத கல்வியினால் இந்தியா முழுவதும் ஒரு வலைப்பின்னலாக பரவும் வாய்ப்புடன் இருந்தனர். அதற்கு அடுத்த நிலையில் வர்த்தகர்கள் அவ்வாறான வலைப்பின்னலைக் கொண்டிருந்தனர் என்பதால் அவர்கள்தான் இந்திய தேசிய அரசிற்கு மூலாதாரமாக இருந்தார்கள்.
துவக்கத்தில் இவர்கள் ஆதரவைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல்கள் நடக்க, நடக்க அடித்தட்டு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டியிருந்தது. அது பல இடங்களில் மாநில அடையாளத்தையும் முதன்மைப்படுத்த வேண்டியிருந்தது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அது வலுவான மாநில அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது போல ஆந்திராவில் முடியாததால் அங்கு என்.டி.ராமராவ் தெலுகு தேசம் என்ற கட்சியைத் துவங்கினார். அதன் பிறகு ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்தினாலும், அவர் மகன் ஜெகன் அதனை மாநில கட்சியாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களே மாநில கட்சித் தலைவர்களானார்கள், மமதா பானர்ஜி போல.
இதற்கிடையே அதிகாரக் குவிப்பு சக்திகள் பாரதீய ஜனதா கட்சியை தங்கள் மீட்புவாத கனவுகளுக்கான கட்சியாக நினைத்து அதன் பின் அணி சேர்ந்துவிட்டார்கள். பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினரும் காங்கிரசிலிருந்து மாநில கட்சிகளுக்கு நகர்ந்துவிட்டார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் தனக்கான ஆதரவுத் தளத்தை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கிக் கொள்வது சவாலாகவே உள்ளது. ஒரே நேரத்தில் அதனால் மைய விசை பாஜக,விளிம்பு விசை மாநில கட்சிகள் ஆகிய இரண்டு ஆற்றல்களுடனும் முரண்பட்டு வெல்ல முடியாது.
ஆனால் இந்தியாவின் அரசியல் விடுதலைக்காக போராடிய காங்கிரசால் அதனை முழுமையான கூட்டாட்சிக் குடியரசாக மாற்றவும் முடியும். அதற்கான தரிசனம் கொண்ட தலைவராகவே ராகுல் காந்தி விளங்குகிறார். அதற்கு அந்த கட்சி மாநில கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்கும் குடிமைச் சமூக அச்சாக முதலில் மாறுவதே பலன் அளிக்கும். அது வலுவாக உள்ள மாநிலங்களில் ஆட்சியமைக்கலாம். மாநில கட்சிகளின் முரண்களம் வலுவாக உருவாகிவிட்ட இடங்களில் அது நட்பு சக்திகளை ஆதரித்து இயங்குவதே பொருத்தமானது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
