பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் மோதலுக்கிடையே நேற்று (செப்டம்பர் 5) ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலினை வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்த சம்பவம் தான் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின், ராமதாஸின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
அவர் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து சணல் வெடிகுண்டுகளை வீசித் தாக்கியது.

இரு குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலக கண்ணாடிகள் சேதமடைந்தன. குண்டு வெடித்ததில் அருண் என்ற இளைஞரும், மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் இளையராஜா என்ற இளைஞரும் காயமடைந்தனர். அந்த நேரத்தில் ம.க.ஸ்டாலின் பாத்ரூமுக்குள் சென்று மறைந்து கொண்டதால் உயிர் பிழைத்திருக்கிறார்.
அப்போதும் கூட அவரை அலுவலகத்தின் பிற அறைகளிலும், அலுவலகத்திற்கு பின்புறமுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்து விட்டு, அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு திரண்ட பாமக தொண்டர்களும், வன்னியர் சங்கத்தினரும், கொலை முயற்சிக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதோடு 10க்கும் மேற்பட்ட லாரி டயர்களை கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டம் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில் ம.க.ஸ்டாலின் கொலை முயற்சிக்கு பின்னணியில் 10 ஆண்டுகால பகை உள்ளதும் வெளியே வந்துள்ளது.
பாமக (ராமதாஸ்) மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரான ம.க.ஸ்டாலினுக்கும், பாமக (அன்புமணி) மயிலாடுதுறை மாவட்ட செயலாளரான வெங்கட் ராமனுக்கும் இடையே 10 வருடங்களுக்கும் மேலாகவே அதிகார மோதல் இருந்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார் ம.க.ஸ்டாலின். அப்போது வெங்கட்ராமன் பாமக மாநில துணைத்தலைவராக இருந்துள்ளர். அப்போதே அதிகார மோதல் காரணமாக இருவரும் ஒருவருக்கொருவர் போட்டுத்தள்ள முயற்சித்து வந்துள்ளனர்.
இதில் ஸ்டாலின் தம்பியான ராஜா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக அப்போது பணியாற்றி வந்தார். அவருக்க்கு நிறைய ரவுடிகளுடன் தொடர்பிருந்தது. அதில் பிரபல ரவுடியான திண்டுக்கல் மோகன் ராம் ராஜாவுக்கு மிகவும் நெருக்கம். அவருக்கு பலவிதமான உதவிகள் செய்து வந்தார் ராஜா.

அப்படியிருக்கும்போது வெங்கட்ராமனின் ஆதரவாளரான திருவிடைமருதூரைச் சேர்ந்த ரவுடி லாலி மணிகண்டனை கொல்ல மோகன் ராமுடன் ஸ்கெட்ச் போடுகிறார் ராஜா.
இது வெங்கட்ராமனுக்கும், லாலி மணிகண்டனுக்கும் தெரியவந்து உஷார் ஆகிவிட்டனர். அதனையடுத்து அவர்கள் இருவரும் ஸ்டாலினுக்கு மூளையாக இருக்கக்கூடிய ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்டனர்.
இந்த நிலையில் ஊர் திருவிழாவிற்காக ராஜா 2015 ஏப்ரல் மாதம் மயிலாடுதுறைக்கு 3 நாள் பயணமாக வந்திருந்தார். அப்போது தெபெருமநல்லூரில் நடைபெற்ற காளியாட்டம் திருவிழாவை பார்த்துவிட்டு காரில் வீடு திரும்புபோது, நேருக்கு நேராக மற்றொரு கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ராஜாவை துடிதுடிக்க வெட்டிக் கொன்றார் லாலி மணிகண்டன்.

அந்த கொலை வழக்கில் லாலி மணிகண்டன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த வெங்கட் ராமன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது தனது தம்பியை கொன்ற லாலி மணிகண்டனையும், வெங்கட் ராமனையும் பழிக்குப்பழியாக கொல்ல திட்டமிடுகிறார்கள் ம.க.ஸ்டாலின் மற்றும் ரவுடி மோகன் ராம்.
அடுத்த 4 மாதத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த லாலி மணிகண்டன், அவரது அண்ணன் மகேஷ் என்ற மகாதேவன், அவரது நண்பர் மற்றும் ஓட்டுநர் என நான்கு பேர் சொகுசு காரில் சென்றுக்கொண்டிருந்தனர்.
இதனை முன்கூட்டியே அறிந்த மோகன் ராம், அவர்களை வழியிலேயே போட்டுத்தள்ள முப்பது பேர் கொண்ட தனது கூலிப்படையை கோவை – திருச்சி நெடுஞ்சாலையில் செட் செய்து வைத்திருந்தார்.
அதன்படி ஆகஸ்ட் 27ஆம் தேதி லாலி மணிகண்டன் வந்த கார் கோவை-திருச்சி நெடுஞ்சாலை சிக்னல் சந்திப்பில் நின்றபோது அந்த காரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது.
அடுத்த என்ன என்று யூகிப்பதற்குள் எதிரே வந்த காரில் இருந்த மோகன் ராம், லாலி பயணித்த காரின் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதற்கு அடுத்த நொடி காரில் இருந்த மற்ற மூவரும் சிதறிய ஓடிய நிலையில் அதில் இருவரை அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றது மோகன் ராம் கூலிப்படை.
இதில் லாலி யார் என்பது மோகன்ராமுக்கு தெரியாது என்பதால், தப்பியோடியவனை விட்டுவிட்டு, கிடைத்த மூவரையும் லாலியாக இருக்கக்கூடும் என கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடுகின்றனர்.
இந்த வழக்கில் ம.க.ஸ்டாலின் உட்பட 12 பேரை கைது செய்தது போலீஸ். தலைமறைவான மோகன் ராமை 3 வருடங்கள் கழித்து 2018ஆம் ஆண்உ மும்பையில் வைத்து கைது செய்தனர்.
அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட வெங்கட் ராமன், நேராக சென்று ராமதாஸை பார்த்து தனது உயிருக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் மிக கொடூரமானவர்கள் என அழுதபடி முறையிடுகிறார். அதன் தொடர்ச்சியாக ஸ்டாலினை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் ராமதாஸ்.
அதுமுதல் ம.க.ஸ்டாலின் மற்றும் வெங்கட் ராமன் தரப்பு ஒருவரையொருவர் கொல்லை சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பாமக கட்சியானது ராமதாஸ் – அன்புமணி என பிரிந்தது. அப்போது மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பதவியை வெங்கட் ராமனுக்கு கொடுக்கிறார் அன்புமணி. அதற்கு பதிலடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ம.க.ஸ்டாலினுக்கு அதே மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பதவியை கொடுக்கிறார் ராமதாஸ். கூடுதலாக வன்னியர் சங்கத்திலும் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீகாந்தியை சந்தித்தபோது, தனது மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக அழைத்திருந்தார் ம.க.ஸ்டாலின்.

அதன்படி கடந்தாண்டு கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதுதான் ஸ்ரீகாந்தி கட்சியினர் அழைப்பின் பேரில் பங்குபெறும் முதல் நிகழ்ச்சி என முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நேரத்தில் தான் தன்னை கொல்ல சணல் கட்டிய பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாகவும், அதில் அதிர்ஷ்டவசமாக தப்பித்ததாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார் ம.க.ஸ்டாலின். அதனை ஏற்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் நாம் விசாரித்தபோது, வெடிகுண்டு வீச்சு தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக ஸ்டாலின் பதிலளித்து வருகிறாராம். ஒப்பிட்டு பார்க்கையில் வெங்கட்ராமனை விட ஸ்டாலினுக்கு கூலிப்படை அதிகம் என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட மூத்த பாமகவினரை நாம் விசாரித்த போது, “ஸ்டாலின் – வெங்கட் ராமன் இடையே மோதல் இருப்பது உண்மை தான். அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு பல இடத்திலும் முன் விரோதம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக போலீஸ் பாதுகாப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்டாலின் புகார் கொடுத்தாரா? இல்லை அவர் கூறியபடி லாலி தரப்பில் இருந்து கொலை முயற்சி நடந்துள்ளதா? அல்லது இதற்கு வேறு யாரும் காரணமா என்ற ரீதியிலும் போலீசார் பல கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.