தூங்க வைக்கிறதா ஏங்க வைக்கிறதா ? – தி பெட் விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

The Bed Movie Review

ஒவ்வொரு வார இறுதியிலும் கூடிக் குடித்துக் கும்மாளமிடும் நண்பர்கள் வேலு (ஸ்ரீகாந்த்) பாண்டி (பிளாக் பாண்டி) மற்றும் இரு நண்பர்கள், நான்கு பெண்களை அழைத்துக் கொண்டு ஊட்டி போய் வர முடிவு செய்கிறார்கள்.

அந்த வாரம் பார்த்து எல்லா விலைமாதர்களும் பிசியாக இருக்க, பெரும் தேடலுக்குப் பிறகு இவர்களுக்கு கிறிஸ்டி (சிருஷ்டி டாங்கே) என்ற ஒரே ஒரு பெண்தான் கிடைக்கிறாள்.

ADVERTISEMENT

கிறிஸ்டியின் அம்மா (திவ்யா) நான்கு நண்பர்களிடமும் தலா பத்தாயிரம் என்று நாற்பதாயிரம் ரூபாய் வாங்கி கொண்டு கிறிஸ்டியை ஊட்டிக்கு அனுப்பி வைக்கிறாள்.

வந்த இடத்தில் மூன்று நண்பர்கள் ஓவராகக் குடித்து விட்டு மல்லாந்து விடுகிறார்கள். வேலு மட்டும் நிதானமாக இருக்க, அவனை கிறிஸ்டி அழைக்க, வேலு அவசரம் இல்லை என்கிறான்.

ADVERTISEMENT

அடுத்த நாள் கிறிஸ்டி குடித்து விட்டு தூங்கி விடுகிறாள்.

மறுநாள் காலை, தூங்கி எழுந்த அந்த பாண்டி மற்றும் நண்பர்கள் வேலுவிடம் வந்து ” கிறிஸ்டியைக் காணவில்லை” என்கிறார்கள். நான்கு நண்பர்களும் சேர்ந்து தேட, முதல் நாள் அவர்களிடம் வம்பிழுத்த ஒரு நபர் கடத்திக் கொண்டு போயிருப்பானோ என்ற சந்தேகம்.

ADVERTISEMENT

கிறிஸ்டியின் அம்மா போன் செய்து மகளிடம் பேச விரும்ப, அவள் ஓடி விட்டதை நண்பர்கள் சொல்ல, அவர்கள் மீது சந்தேகம் கொண்டு, தான் ஊட்டி வளர்த்த மகளைத் தேடி ஊட்டிக்கு வருகிறாள் அந்தப் புனிதத் தாய்.

இதற்கிடையில் நான்கு நண்பர்களில் ஒருவன் கொல்லப்பட்டு ஒரு கோணிச் சாக்கில் கட்டப்பட்டு ஊட்டி காட்டுக்குள் பிணமாகக் கிடக்கிறான்.

பிணத்தைக் கைப்பற்றி போலீஸ் (ஜான் விஜய், தேவி பிரியா) விசாரிக்க, அந்த நேரம் பார்த்து கிறிஸ்டியின் அம்மா புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வர, எல்லோரும் சேர்ந்து நண்பர்களை கண்டுபிடிக்க,

கிறிஸ்டி என்ன ஆனாள்? நண்பர்களில் ஒருவனைக் கொன்றது எவன்? எவள்? அல்லது எது என்பதை, போனால் போகிறது என்று படுத்துக் கொண்டு கடமைக்கு சொன்னால் அதுதான்…

ஆஞ்சநேயா புரடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் கந்தசாமி, கணேசன், விஜய்குமார், லோகேஸ்வரி விஜயகுமார் ஆகியோர் தயாரிக்க, ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவி பிரியா, பப்பு ஆகியோர் நடிக்க, எஸ் . மணிபாரதி எழுதி இயக்கி இருக்கும் படம். இவர் இதற்கு முன்பு வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை இயக்கியவர். (இந்த வாக்கியத்தில் குறியீடு எதுவும் இல்லை) ‘தி பெட்’.

இதே பெயரில் ஒரு காவியப் படம் உண்டு.

கல்யாணம் செய்த காலம் முதல், கட்டிய வீட்டில் வாழ்ந்து செழித்து வயதான ஒரு தம்பதி, அந்த வீட்டை விற்று விட்ட நிலையில் காலையில் அந்த வீட்டை விட்டு அவர்கள் போய் விட வேண்டும் என்ற சூழலில், அவர்கள் படுக்கை அறைக் கட்டிலில் கடைசியாக அவர்கள் கழித்த இரவின் காவிய உணர்வை சொன்ன, 2018 ஆம் ஆண்டு வந்த அர்ஜன்டைனா படத்தின் பெயரும் தி பெட் தான். (இந்த ஒன் லைனே எவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது பாருங்கள்)

சரி… இந்த பெட் எப்படி இருக்கு?

படம் முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த லொகேஷன் அபாரமாக இருக்கிறது. தன்னால் முடிந்தவரை ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கோகுல்.

தாஜ் நூரின் இசை மர்ம நொடிகளில் நன்றாக இருக்கிறது. மற்றபடி காமெடி என்ற பெயரில் படம் முழுக்க கொட்டிக் கொண்டே இருக்கும் உப்பு சப்பு இல்லாத காட்சிகள் மற்றும் வசனங்களுக்குப் பின்னணி இசையாக, ஏதாவது ஒரு இசைக்கருவியை உருட்டி அதை காமெடியாக்க பகீரத தவம் செய்தும், தோற்றுப் போயிருக்கிறார் தாஜ்நூர்.

ஒரு பெட் தனது அனுபவங்களை கதையாக சொல்கிறது என்று இந்தப் படத்தைப் பற்றி மக்களிடம் அறிமுகப்படுத்தியது படக் குழு. படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் ஒரு கட்டில் அப்படி ஒரு விஷயத்தை சொல்லி பில்டப் கொடுக்கிறது.

ஆகா ஒரு வித்தியாசமான படம் சிக்கிருச்சி என்று சந்தோஷமாக உட்கார்ந்தால் நம்மைப் பார்த்து ஏளனமாக மானசீகமாகச் சிரிக்கிறது படக்குழு.

அதுக்கு அப்புறம் அந்த பெட் ஊமையாகப் போச்சு போல. செத்துப் போயிருச்சோன்னு நினைத்தால் அது நடக்கவில்லை. கடைசி காட்சியில் வந்து, பணமில்லாத காரணத்தால் எடுக்க முடியாத ஒரு காட்சியை மட்டும் போனால் போகிறது என்று சொல்லி விட்டு, படத்தைக் கைவிடுகிறது பெட்.

அதுவும் எப்படி? முதல் காட்சியில் இருந்தது போலவே அப்படியே கசங்காமல் கலையாமல், முதல் காட்சியில் பெட் மீது தூவப்பட்ட ரோஜா இதழ்கள் எல்லாம் கடைசிவரைக்கும் அதே இடத்தில் அப்படியே இருக்கும்படியாக.!

இதுக்கு அந்த பெட் முதல் காட்சியிலேயே முடிந்து போயிருக்கலாமே?

தவிர பெட் என்றாலே அது செக்ஸ் விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஒரு சரியான சிந்தனை அல்ல.

இப்படி ஒரு கதை எதுக்கு என்பது முதல் கேள்வி. சரி ஒரு சென்ஷேஷனலுக்குதான் என்று வைத்துக் கொள்வோம். எனில் இந்தக் கதை எப்படிப் போக வேண்டும். இந்தக் கதை மூலம் என்ன சொல்ல வேண்டும். இப்படி ஆசைப்படுபவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள், ஆபத்துகள், இழப்புகள், பகை, எல்லாம் வரும் என்பதை சொல்வதுதானே சரியாக இருக்கும்?ஆனால் இந்தப் படத்தில் எல்லா பிரச்சனைகளையும் செய்வது ஹீரோ மற்றும் நண்பர்களான இந்த நான்கு பேர்தான். இவனுக செத்தா நமக்கு என்ன? செதஞ்சா நமக்கு என்ன?

இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் பாலியல் தொழில் செய்யும் தொழிலில் பல்வேறு துறைகளை சார்ந்த எல்லோரும் மிக நல்லவர்களாக உத்தமர்களாக, சொன்ன சொல் தவறாத தங்கங்களாக, முன்பே சொன்னது போல மலிவு விலையில் மக்கள் சேவை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

எனில், ”பெண்களே.. வயிற்றுப் பசிக்காக இப்படி உடல் பசி தீர்க்கும் தொழிலுக்கு வராதீர்கள். எல்லாப் பயலும் சைக்கோவா இருக்கான். இங்க காதல் சைக்கோக்கள் முதல் முடியாத சைக்கோக்கள் வரை பலர் உண்டு. பேசாமல் வருமானம் குறைவு என்றாலும் கண்ணியமான தொழிலுக்குப் போங்க ” என்று சொல்லித் தொலைத்து இருந்தால் கூட இது நல்ல படம்தான்.

எதுவுமே இல்லாமல் எருமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி, எந்த நோக்கமும் இல்லாமல், ஒரு கில்மா கதை, அருவருப்பான ஆபாச வசனங்கள், வக்கிரமான சூழல் இதை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்ததால் யார் பார்ப்பார்கள்? பணம் போட்டவர்கள் பாவம் இல்லையா?

சரி அதையும் ரசனையாக ரகளையான சொன்னார்களா அதுவும் இல்லை.

நான்கு ஆண்கள் ஒரு பெண் என்று சென்னையில் இருந்து காமத்துக்காக ஊட்டிக்கு போகிறவர்கள்,(கான்செப்ட் கண்ணியமானது இல்லை என்றாலும்) ஆளுக்கு ஒரு ரூம் எடுத்து ஐந்து ரூமில் தனித்தனியாக தாங்குகிறார்கள். அவ்வப்போது கதவு தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டு அனுமதி வாங்கி உள்ளே வந்து பேசிவிட்டுப் போகிறார்கள்.

தெய்வமே… அவ்வளவு நல்லவங்களாய்யா நீங்க? தயாரிப்பளார் காசு எப்படி எல்லாம் வீணாகி இருக்கு பாருங்கள்.

அது மட்டுமல்ல. ”காசு கொடுத்து அழைச்சுட்டு வந்துட்டு இப்படி சும்மா இருக்கீங்களே?” என்ற ரீதியில் வருத்தப்படும் பெண்ணை, உருகி உருகி காதலிக்கிறார் ஹீரோ. அதுக்கு அவர் சொல்லும் அம்மா செண்டிமெண்ட் கேலிக்கூத்து (ஜென்டில் மென் படக் காட்சியை இப்படி யூஸ் பண்ண முடியும் என்று தெரிந்தால் ஷங்கர் நடுங்கிப் போவார்) அதுக்கு அப்புறமும் ஒரு கிளைமாக்ஸ் சொல்றாங்க பாருங்க. எதையும் தாங்கும் இதயம் கூட இதை தாங்கப் போராடும்.

நாயகனாக ஸ்ரீகாந்த் இருக்கிறார். குறை சொல்லக் கூட ஏதும் இல்லாத ஒரு நடிப்பு. ஷாட்டிலேயே அவரை ஜான் விஜய் கலாய்த்து இருக்கிறார்.

மலிவு விலையில் மக்கள் சேவை செய்யும் சேவை கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே என்பது படத்துக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் இந்த கேரக்டர் சிருஷ்டிக்கு திருஷ்டிதான். பரிகாரம் செய்ய முடியாத திருஷ்டி.

ஒரு கதாநாயகி (சாதாரண கதாநாயகி என்றாலும்) விலைமாதுவாக நடிக்க வேண்டும் என்றால் அந்தக் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும்; படத்தின் நோக்கம் என்ன என்ற விசயங்கள் முக்கியம்.

இந்தப் படத்தில் போலீஸ்காரர் ஜான் விஜய்யின் மனைவியாக ஒரு கவர்ச்சி நடன நடிகை வருவார். நிறைய படத்தில் உதட்டை சுளித்துக் கடித்து வெடுக் வெடுக் என்று இடுப்பை ஆட்டி ஆடுவார். படத்தில் ஒரு ஆணி கூட, ம்ஹும் குண்டூசி கூட பிடுங்காத கேரக்டர் அது.

அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் சிருஷ்டி டாங்கே. அதுவும் கதாபாத்திரத்தின் பெயரைக் கூட சிருஷ்டி என்ற நிஜப் பெயருக்கு ரைமிங் ஆக கிறிஸ்டி என்று வைத்து இருப்பதைப் பார்த்தால்…. !

பாண்டியின் நடிப்பு எல்லாம் எப்படி காமெடியில் வரும் என்று எத்தனை ரூம் போட்டு யோசித்தாலும் புரிய வராது.

பொதுவாக ஒரு படத்தில் கம்பீரமான நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டர் வந்தால் அது படத்தில் வரும் குற்றவாளிகளுக்கு கஷ்டம். அதே அப்படி ஒரு கேரக்டரில் ஜான் விஜய் வந்தால் படம் பார்ப்பவர்களுக்குதான் கஷ்டம். இந்தப் படத்திலும் !

நான் பாடும் பாடல் என்ற படத்தில் கவுண்டமணி பலகாலம் ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்திருப்பார். ஒரு கடைக்குப் போவார். தேங்காய் வியாபாரி (பசி நாராயணன்)யிடம் தேங்காய் விலை கேட்பார்.

”பசி நாராயணன்: அஞ்சு ரூபா

கவுண்டமணி; ஏங்க … இந்த ஒரு ரூபா ரெண்டு ரூவாய்க்கு எல்லாம் தேங்கா கிடைக்காதுங்களா?
கோபப்படும் பசி நாராயணன்; எது ரெண்டு ரூபாய்க்கு முழு தேங்காயா? எந்தக் காலத்துல இருக்க நீ? இவ்வளவு நாளா ‘உள்ள’ இருந்துட்டு வந்தியா?

அதிரும் கவுண்டமணி: நான் உள்ள இருந்தது இவனுக்கு எப்படி தெரியும்?” என்பார்

ஆனா நமக்கு தெரியுதே

மொத்தத்தில் பெட்… சோம்பேறிக் கூடம்

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share