திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக – அமைச்சர்கள் ரகுபதி, டி.ஆர்.பி ராஜா தாக்கு

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் என டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜனவரி 17-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்குத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பதிவில், “மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுகவே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டது! திமுக அரசின் திட்டங்களையே வெளியிட்டு புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு பழனிசாமி போய்விட்டாரே… திராவிட மாடல் ஆட்சி 2.0 உறுதியாகிவிட்டதை பழனிசாமியே எம்.ஜி.ஆர் மாளிகையில் அமர்ந்து சங்கநாதம் செய்திருக்கிறார்! 2019-ல் ஒரே ஒரு தவணையாக 2 ஆயிரம் ரூபாயை ஆட்சியில் இருந்த போது தராத பழனிசாமியா, அடுத்து ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை வழங்குவார்?

திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் விலையில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுகவே நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் மிகப் பெரிய தாக்கத்தை இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருப்பதை, எதிர்க் கட்சித் தலைவரே உணர்ந்திருக்கிறார். அதன் தாக்கம்தான் இப்போது அந்த திட்டங்களையே காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் ரூ.1000 போன்ற வாக்குறுதியைத் தந்து திமுக ஆட்சிக்கு வந்தபோது, கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகப் பேசினார் பழனிசாமி.

ADVERTISEMENT

“குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துக் கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியது’’ என்றெல்லாம் பேசிய பழனிசாமியின் நாக்குதான் இப்போது அதே திட்டங்களையே வாக்குறுதி என உருமாற்றிப் பேசுகிறார். திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே “காப்பி பேஸ்ட்” வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார். புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு பழனிசாமி போய்விட்டாரே… திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். பெண்கள், மாணவர்கள், முதியோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்குமானத் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருவதால் திராவிட மாடல் ஆட்சி 2.o உறுதியாகிவிட்டதை எடப்பாடி பழனிசாமியே எம்.ஜி.ஆர் மாளிகையில் அமர்ந்து சங்கநாதம் செய்திருக்கிறார் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருவதால் ஒட்டுமொத்தப் பெண்களும் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அச்சமடைந்திருக்கும் பழனிசாமி, வெறும் குழப்பத்தையாவது ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மகளிருக்கு 2000 ரூபாய் தருவதாகப் பொய்யாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.”என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு “டூப்” போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !

ADVERTISEMENT

2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share