தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆளும் திமுக, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பரப்புரை பயணத்தை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது.
அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுகவும் விலைவாசி உயர்வை மையமாகக் கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக நூதன முறையில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,“விடியா திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக ‘விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி’ என்ற தலைப்பில், AIADMK Connect செயலியைப் பயன்படுத்தி கையடக்க பிரிண்டர்கள் மூலம் முன்னெடுத்து,மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும், தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால் ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Billஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம்.
விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்.”இந்த பிரச்சாரத்தில், வீடு வீடாகச் சென்று மின்சாரம், குடிநீர், எரிவாயு போன்ற பில்-களை அடிப்படையாகக் கொண்டு விலைவாசி உயர்வின் தாக்கத்தை எளிய முறையில் விளக்குவது குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசியலில் புதிய வகை டிஜிட்டல்-அடிப்படையிலான வீடு வீடு பிரச்சார முயற்சியாகத் திகழ்கிறது.
