பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்ரல் 22) தெரிவித்தார். Thangam Thennarasu old pension
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், “அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு ஊழியர்கள் நலனில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து வருகிறது.
அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகளை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்தவரையில், ககன்தீப்சிங் பேடி தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவிடம் பல அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளனர்.
நானும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் சில முறை அரசு ஊழியர்களிடம் பேசியுள்ளோம். எனவே, அரசும் முதல்வர் ஸ்டாலினும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் மிகுந்த கவனத்தோடு கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நான் பேசி, குழுவிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார். Thangam Thennarasu old pension
