தங்கமணி கேட்ட கணக்கு… தங்கம் தென்னரசு செய்த தரமான சம்பவம்… அதிமுகவை முடிவு செய்யும் அந்த சாணக்கியா யார்?

Published On:

| By christopher

thangam thennarasu reply on thangamani about admk

இலவச மடிக்கணினியின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, மறைமுகமாக அதிமுகவின் நிலையையும் எடுத்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. thangam thennarasu reply on thangamani about admk

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் ஐந்தாவது நாளாக இன்று (மார்ச் 21) நடைபெற்றது.

ரூ. 10 ஆயிரத்தில் தரமான லேப்டாப்?

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கூட்டிக்கழித்து பார்த்தால் ஒரு லேப்டாப் 10 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் தரமான லேப்டாப் எப்படி வழங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ரூ.10 ஆயிரம் அல்ல, ரூ.20 ஆயிரம்…!

இதனை தங்கமணியின் மனக்கணக்கு என்று குறிப்பிட்டு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுகையில், “இந்த திட்டம் அறிவித்தபோது அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று சொல்லியிருந்தோம். முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம். தொடர்ந்து அடுத்த ஆண்டு மேலும் ரூ.2000 கோடி ஒதுக்கப்படும்.

இப்போது தங்கமணி கூட்டி கழித்து கணக்கு பார்த்தால் மாணவர்களுக்கான ஒரு மடிக்கணினிக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தங்கமணி தரம் குறித்து கவலைப்பட வேண்டாம். கல்லூரி மாணவர்கள் விரும்பி பயன்படுத்தும் வகையில், ஏன் சட்டமன்ற உறுப்பினர்களே பொறாமைப்படும் வகையில் மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்” என்று பதில் அளித்தார்.

அதிமுகவுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

தொடர்ந்து அவர், “இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன். நான் நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது தங்கமணி மனக்கணக்கு போட்டுள்ளார் எனச் சொன்னேன். அந்த அடிப்படையில் சற்று கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுவிட்ட தங்கமணிக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள்.

எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோதும் சரி, வெளியேறி தனி இயக்கம் கண்ட போதும் சரி, அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் நாங்கள். இன்னும் சொல்லப்போனால், தற்போதைய முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) இடத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மிகுந்த அன்பை நேரடியாக கொண்டவர். இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய படம் வெளிவந்தால் அதனை பார்த்து எப்படி இருக்கிறது என்று தற்போதைய முதலமைச்சரிடம் கருத்து கேட்கக்கூடிய அளவுக்கு உரிமையும் அன்பும் கொண்டிருந்தார்.

அதிமுக எதிர்காலம் வேறொருவர் கையில்!

அதோடு, எங்களோடு அரசியல் களத்தில் நீண்ட காலமாக களமாடி கொண்டிருப்பவர்களாக அதிமுகவினர் இருக்கிறார்கள். அதேபோல் உங்களோடு இருக்கக்கூடிய தொண்டர்களும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும் இயக்கப்பற்றின் காரணமாக அரசியல் களத்தில் களமாடக்கூடியவர்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

இந்த அரசியல் பயணத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கே இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் கூட்டல் கழித்தல் கணக்கை பேரவையில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால், உங்களுடைய கூட்டல் கழித்தல் கணக்கை வேறொரு இடத்தில் இருந்து இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அதுவும், வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்களின் எதிர்காலத்தையும், உங்கள் அனுதாபிகள் எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போக செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு இந்த கணக்குகளை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

மடிக்கணினி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சற்று கவனக்குறைவாக இருந்து விட்டதை போல, உங்கள் மடியில் இருக்கக் கூடிய கனத்தை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் மீது இருக்கும் உரிமை மற்றும் அன்பின் காரணமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இங்கே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்றே தெரிகிறது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கலகலப்பாக பேசினார். இதனைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட அவையினர் அனைவருமே சிரித்தனர்.

தங்கமணி பதிலும்… ஸ்டாலின் வாழ்த்தும்!

இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி “அதிமுகவிற்கு என்று கொள்கைகள் உள்ளது. நாங்கள் எந்த கூட்டல், கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம்” எனக் கூறினார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், “தங்கமணி சொல்வது போல, கூட்டல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் அதிமுகவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share