2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களின் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி இன்று (செப்டம்பர் 25) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற கருபொருளில் நடைபெறும் இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றுள்ளார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
நிகழ்ச்சியில் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற தமிழக அரசின் கல்வித் திட்டங்கள் மூலம் பயனடைந்த மாணவ, மாணவிகள் தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.
அப்போது விழாவில் பங்கேற்ற மெய்யழகன் பட புகழ் இயக்குநர் பிரேம் குமார் பேசுகையில், “நான் சின்ன வயதில் படித்தது அரசு பள்ளியில் தான். அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டுள்ளேன். ஆனால் இன்று பள்ளிக் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கல்வியை மிகப்பெரிய தன்மான சொத்தாக பார்ப்போம். அந்த வகையில், ‘படிங்க, படிங்க.. படிப்பதை மட்டும் நீங்கள் பாருங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என நம் மாநிலத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது பெருமையாக உள்ளது. கல்வியின் முக்கியத்துவமும் புரிகிறது” எனப் பேசினார்.
அதனை தொடர்ந்து லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், “நானும் அரசுப் பள்ளியில் பயின்றவன் தான். இலவச பஸ்பாஸ் திட்டத்தில் இருந்து அரசின் அனைத்து இலவசத் திட்டங்கள் மூலமாக பயின்று பொறியியல் படிப்பை படித்து முடித்தேன்.
நான் கிராமப்புறத்தில் இருக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் படிக்கும்போது மதிய உணவுத் திட்டத்தைப் போன்று காலை உணவும் வழங்கினால் நன்றாக இருக்குமே என ஏங்கியிருக்கிறேன். அதனை தற்போது செயல்படுத்தியுள்ள தமிழக அரசுக்கு நன்றி.
பெரிய பெரிய முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசுகளுக்கு மத்தியில், சாதாரண பாமர மக்களின் குழந்தைகளுக்காக திட்டங்களை செயல்படுத்துவது பெரிய விஷயம். அதற்காக தமிழக அரசுக்கு இந்த மேடையில் நன்றி தெரிவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
சிலர் ’சச்சின், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானை சுட்டிக்காட்டி அவர்கள் படித்தார்களா? சாதனை படைக்கவில்லையா?’ என்று கேட்பார்கள். ஆனால் உண்மையில் அப்படி ஜெயித்தவர்கள் 100 பேர் தான். ஆனால் படித்து ஜெயித்தவர்கள் தான் இங்குள்ள அனைவரும். விதிவிலக்குகள் ஒருபோதும் எடுத்துக்காட்டாக இருக்கக் கூடாது. முதல்வர் சொன்ன மாறி நானும் ஒருமுறை இந்த மேடையில் சொல்கிறேன் ‘படிங்க’ என தமிழரசன் பேசினார்.