தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. கம்போடியாவின் மாகாணங்கள் மீது தாய்லாந்தின் போர் விமானங்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதனால் இரு நாடுகளின் எல்லைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் Thailand Cambodia
தாய்லாந்து- கம்போடியா இடையே நூற்றாண்டுகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனைதான் தற்போது யுத்தமாக மாறி இருக்கிறது.
தங்களது நாட்டு எல்லைக்குள் கம்போடியா ராணுவ வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே மோதல் வெடித்ததாக தாய்லாந்து குற்றம்சாட்டியுள்ளது. மேலும் எல்லைகளில் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாய்லாந்து ராணுவ முகாம்கள் மீது கம்போடியா ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பதும் குற்றச்சாட்டு.
கம்போடியா ராணுவத்தின் கண்ணிவெடித் தாக்குதலில் தங்களது ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தாய்லாந்து தெரிவித்திருந்தது. ஆனால் கம்போடியாவோ இதனை நிராகரித்து தாய்லாந்து ராணுவம் மீது குற்றம்சாட்டியிருந்தது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், கம்போடியாவின் இரு மாகாணங்கள் மீது தாய்லாந்தின் 6 போர் விமானங்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதனால் கம்போடியா- தாய்லாந்து இடையே யுத்தம் வெடித்துள்ளது. இருநாடுகளும் டிரோன்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் கொண்டு சரமாரித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.