அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, 1990 களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘தடை அதை உடை’.
1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக் கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியாவானது கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லும் படமாம் இது.
(இந்த 90 களையும் உண்மைக் கதைகளும் என்ற ரூட்டில் முந்நூறு படமாவது வரும் போலிருக்கு. பிளீஸ். அந்த 90களை விட்டுட்டு ஒண்ணு முன்னாடி வாங்க. இல்லன்னா பின்னாடி போங்க )
இந்தப் படத்தில் சில மேடை நாடகக் கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
படத்தின் இயக்குனர் அறிவழகன், “ இந்தப் படத்தில் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளோம். ஷூட்டிங் பார்த்த என் அப்பா, ” என்னப்பா இது? விவசாயம் செய்வதை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே? என்றார்.
எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று பேசி இருந்தார்.
நம்பிக்கை வெல்லட்டும்.
சினிமா எடுப்பது ரொம்ப கஷ்டம்தான். மறுக்கவில்லை. ஆனால் விவசாயம் செய்வது தான் அதை விடக் கஷ்டம். மக்கள் ரசிக்கும் படம் எடுத்தால் அது எப்படியாவது நன்றாக ஓடி விடும். ஆனால் ஒழுங்காக விவசாயம் செய்தாலும் பொருள் மலிந்து விலை குறைந்து விளைவித்த பொருளை கண்ணீரோடு ரோட்டில் கொட்ட வேண்டிய நிலைதான் விவசாயிக்கு.
ஆகவே இயக்குனர் அறிவழகன் முருகேசன்… தொடர்ந்து சினிமா எடுங்கள். அனால் விவசாயம் செய்யும் அப்பாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருங்கள்.
-ராஜ திருமகன்
