–ராஜ திருமகன்
உடைத்ததா? உடைந்ததா? ‘
மூன்று இளைஞர்கள் (குணா பாபு, திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது), ஒரு ஜீப்பில் லிப்ட் கேட்கிறார்கள். போகும் வழியில் ஜீப்காரன் இவர்களை விசாரிக்க, தாங்கள் மூவரும் முறையே சினிமா இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், என்கிறார்கள். அவர்கள் எடுத்த படம் தோல்வி என்கிறார்கள்.
என்ன கதை என்று கேட்க, தங்கள் படத்தின் கதையைச் சொல்கிறார்கள்.
பட்டுக்கோட்டை பகுதியில் ஆளுங்கட்சியில் செல்வாக்கு உள்ள நபரின் அடியாளாக இருக்கிறார் டைரக்டர். அதே கட்சியில் செல்வாக்கு இழந்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாத ஒரு நபர் வன்மம் கொள்கிறான், இயக்குனரை தங்கள் வசம் இழுத்து, குட்டையைக் குழப்ப நினைக்கிறான்.
செல்வாக்கு உள்ள ஆளுக்கும் அவனது அக்காவுக்கும் மகன் மகளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது என்பதில் குடும்பச் சண்டை. அதே நேரம் அந்த செல்வாக்கு நபர் ஒரு ஏழைக் குடும்பத்தை கொத்தடிமையாக வைத்து இருக்கிறான்.
முதல் மகனும் கொத்தடிமையாகப் போய்விட்ட நிலையில் இரண்டாவது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முயல, அதை செல்வாக்கு நபர் தடுத்து அடிக்க, இரண்டு பக்கமும் கொலைகள் விழுகிறது. ஒருவழியாக சிறுவன் பள்ளியில் சேர்கிறான் இப்படி ஒரு கதையை இயக்குனர் சொல்ல தயாரிப்பாளர் அதை குப்பை என்று சொல்லி நிராகரிக்கிறார்.
அடுத்து மேற்படி இயக்குனர் எழுத்தாளர் நண்பர்கள் சென்னையில் யூடியூப் வைத்து நடத்துகிறார்கள், அதில் மோசமான அரசியல்வாதி ஒருவனை பற்றி அவனுக்கே தெரியாமல் அவனது கெட்ட விசயங்களை வெளிப்படுத்த முயல அவன் இவர்களை கொலை செய்ய வருகிறான். நண்பர்களை ஒரு அகோரி காப்பாற்றுகிறார்.
அடிக்கடி யூடியூபில் வீடியோ போடும் ஒரு பெண், கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் தனக்கு பிள்ளை இல்லை என்று வீடியோ போட, அதற்கு வந்த ஆபாச கமெண்டுகளால் மனம் உடைந்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு சாகிறார். அந்த பெண்ணின் தம்பி அந்த ஆபாச கமென்ட் போட்டவனைக் கொலை செய்யத் தேடுகிறார்.
இயக்குனர் சொன்ன இரண்டாவது கதையும் திருப்தி இல்லாத நிலையில் தயாரிப்பாளர், கடைசியாக ஒரு சான்ஸ் கொடுக்கிறார். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா இல்லையா என்பதே….

திருக்குறள் படத்தில் பழந்தமிழ் வசனங்கள் பேசி நடித்த குணா பாபு, அங்காடிதத் தெரு மகேஷ், பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகம்மது, வேல்முருகன் நடிப்பில் வந்திருக்கும் படம். காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி இருக்கும் படம்.
நல்ல விஷயங்கள் உள்ள கதை. வயல் வெளி, ஓடை, புள் காடு என்று கிராமத்து லோக்கேஷன்களை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் தோட்டா மணிகண்டனும், தங்கப் பாண்டியனும். சாய் சுந்தர் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். டாய்சியின் படத்தொகுப்பு பலவீனமே.
”எதிர்காலத்தில் இங்கே ரெண்டே ஜாதிதான் இருக்கும். ஒண்ணு யூடியூபர் ஜாதி. இன்னொன்று சப்ஸ்கிரைபர் ஜாதி” இப்படி படத்தின் வசனங்கள் சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் வெகு சாதரணமாகவும் கடக்கின்றன.
”போதையில் சிக்கி வாழ்வை இழக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்க அரசியல்வாதி”அவர்களை எல்லாம் திருத்தவே முடியாது. பிச்சை எடுக்கக் கூட தயங்காதவர்கள்” என்று அவர் பதில் சொல்ல, அதையே” படித்து பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உங்கம் திட்டம் என்ன? ”என்று கேள்வியை மாற்றினால் அந்த பதில் எப்படி தவறாக மாறும்.?
இப்படி இயல்பான கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற்று அதையே வேறு கேள்விகளாக மாற்றி, அரசியல்வாதியின் பதில்கள் திமிராக இருப்பது போலக் காட்டும் உத்தி… இப்படி தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட இந்த உத்தி இந்தப் படத்தில் சிறப்பு.
அதே போல சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டு பிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமென்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.

ஒன்று ஓவராக நடிப்பது அல்லது நடிக்காமல் சும்மாவே நிற்பது என்ற முடிவில் இருக்கும் நடிகர்கள், நேர்த்தி இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள், ஆசைகாட்டி மோசம் செய்யும் திரைக்கதை… இந்தக் குறைபாடுகளை நீக்கி இருக்கலாம்.
முதல் நாள் பள்ளியில் சேர்க்காமல் கொத்தடியின் மகனையும் அவனைச் சேர்க்க வந்த கொத்தடிமையையும் அடித்து விரட்டி அலைக்கழிக்கும் ஆசிரியர், அடுத்த நாள் அவர்கள் வரவேண்டும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். இப்படி பல கதாபாத்திரச் சீர்குலைப்புகள் படத்துடன் ரசிகனை ஒன்ற விடாமல் தடுக்கின்றன.
இந்தப் படத்துக்கு கத்தி கபடா வாங்கவும் சிவப்பு பெயின்ட் வாங்கவுமே பெரிதாக செலவாகி இருக்கும் என்ற அளவுக்கு படம் முழுக்க யாராவது யாரையாவது சதக் சதக் என்று குத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இது போன்ற காரணங்களால் உடைந்து விட்டது, தடை அதை உடை.
