ADVERTISEMENT

டிக்கெட் விற்பனையில் லட்சக்கணக்கில் கொள்ளை… தியேட்டர் மீது மாமன் பட தயாரிப்பாளர் புகார் : அதிரடி நடவடிக்கை!

Published On:

| By christopher

TFAPA strict action against theater who gave fake collection report

டிக்கெட் விற்பனை கணக்கை தயாரிப்பாளரிடம் குறைவாக கணக்கு காட்டி ஏமாற்றியதாக ’மாமன்’ திரைப்பட தயாரிப்பாளரான குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமணன் நடிப்பில் மே 16ம் தேதி வெளியான படம் ‘மாமன்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் இப்படம் ரூ.40 கோடியை கடந்து சாதனை படைத்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தியேட்டர் மாமன் படத்திற்கான வசூல் கணக்கில் 8,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்களை குறைவாக காட்டியுள்ளதாக படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளரான கே. குமார் தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், குமார் கூறிய புகார் உண்மை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த தியேட்டர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும், இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் டி.சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கு டிக்கெட் விற்பனை கணக்குகளை சரியாக கொடுக்காமல், குறைவான ஒரு கணக்கினை கொடுத்திருப்பது குறித்து சமூக ஊடங்களில் செய்தி வந்ததது.

எங்கள் சங்க உறுப்பினர் கே குமார் (லார்க் ஸ்டூடியோ தயாரிப்பாளர்) இது பற்றி, அவரின் சமீபத்திய திரைப்படமான ’மாமன்’ படத்தின் வசூல் கணக்கில் 8,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்களை இந்த திரையரங்கம் குறைவாக காட்டியுள்ளதாக சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

இந்த ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல் அவர்கள் மேலும் பல திரைப்படங்களுக்கு இவ்வாறு செய்து வந்துள்ளார்கள் என்று அறிகிறோம். இது மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வாகும்.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் அரிதாய் தான் திரைப்படங்கள் வெற்றியடைகின்றன. 10 சதவீதத்திற்கும் குறைவான தயாரிப்பாளர்கள் தான் வணிக ரீதியில் வெற்றி பெறுகிறார்கள். மீதம் அனைவரும், அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து திரைத்துறையை விட்டு போகும் நிலை தான் தற்போது உள்ளது. அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த செயலை யார் செய்தாலும் அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, திரையரங்குகள் உட்பட.

இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, கீழ்கண்ட முடிவுகளை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு மனதாக எடுத்துள்ளதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

🔴தவறு செய்ததாக கண்டறியப்பட்ட காஞ்சிபுரம் திரையரங்குகளின், கடந்த இரண்டு வருடங்களின் அனைத்து திரைப்படங்களுக்கான கணக்கு வழக்குகள் (collection reported through DCR Vs BMS report) தணிக்கை செய்யப்பட்டு, அவர்கள் நியாயமாக தர வேண்டிய வசூலின் பங்கை, விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடனே தர வேண்டும்.

🔴அந்த தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த திரையரங்குகள் கொடுக்கவேண்டிய அனைத்து பாக்கி தொகையும் கொடுக்கும் வரை அந்த திரையரங்குகளுக்கு எந்த புதிய படத்தையும், திரையிட அனுமதி தராமல், அனைத்து சங்கங்களும் Non-Cooperation செய்ய வேண்டும். நடப்பு தயாரிப்பளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதை கடைபிடிப்பார்கள். அதே போல விநியோகஸ்தர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களும், இதை அமல்படுத்த வேண்டும். ஒரு தொகை அபராதம் விதிப்பதின் மூலமே, இத்தகைய கண்டிக்க வேண்டிய செயலை செய்த திரையரங்கு நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் செயலுக்கு உரிய தண்டனையை அவர்கள் பெற்றாக வேண்டும்.

🔴இப்போது தியேட்டர்களில் ஓடிகொண்டு இருக்கும் திரைப்படங்கள், இனி வெளியாகும் படங்களின் வசூல் விபரங்களை, திரையரங்கு உரிமையாளர்கள்/Management Team, இனி தினமும் Book My Show/Ticket New-ல் இருந்து வரும் System Generated DCR- ஐ மட்டுமே கொடுக்கவேண்டும். விநியோகஸ்தர்களும், அவர்களின் மொத்த வசூல் விபரங்களுடன் அந்த Book My Show/Ticket New-ல் இருந்து வரும் System Generated DCR-ஐ தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் அனுப்ப வேண்டும்.

🔴திரையரங்குகள், வசூல் விபரங்களை சரியான முறையில் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நேரடியாக உடனே தருவதற்கான, கணினியின் (Computerized, Integrated Online Collection Reporting System) மூலம் தீர்வுகளை கொண்டுவர நமது சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அது செயல்பாட்டுக்கு வரும்வரை, மேற்குறிப்பிட்ட வசூல் விபரங்களை System Generated Book My Show/Ticket New DCR மூலமே தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் முறையை அமுல்படுத்துமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தவறு செய்த திரையரங்குக்கு மேற்குறிப்பிட்ட தணிக்கை ஏற்பாடுகளை உடனே செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு. திருப்பூர் சுப்ரமணியம், தலைவர்,
தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்,
(Tamil Nadu Theatres & Multiplex Owners Association),
திரு அருள்பதி, தலைவர்,
தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம்,
(Tamil Film Active Distributor Association),
திரு.R. பன்னீர் செல்வம், பொது செயலாளர்,
தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம்,
(Tamil Nadu Film Exhibitors Association),

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share