ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு வழங்கிய தீர்ப்பில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது பண பலன்களுடன் ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.
அதேசமயம் ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்தாண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.
சிறுபான்மை நிறுவனங்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக்க முடியுமா? அது அவர்களின் உரிமைகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஒரு பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளை வகுத்து என்சிடிஇ, டெட் ஆகிய தேர்வுகளை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.