கிறிஸ்தவ மக்கள் வழிபடும் கல்லறைத் திருநாளை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையிட்டிருந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் TET தேர்வு நடத்தப்படவில்லை. ஆசிரியர் கனவுடன் வலம் வரும் பலரும் இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்து எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியமானது கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே வேளையில், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளில் தேர்வு நடைபெறும் என அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் சென்று வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றப்பட்டு இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நிர்வாக காரணங்களுக்காக, நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.