எல்லை மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை மாநிலங்கள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஏவுகிற டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தும் வருகிறது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் வட மாநிலங்கள் பலவற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் இரவு 7 மணிக்கு மேல் அனைத்து இடங்களிலும் விளக்குகளை அணைத்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 3 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு காசி குன்றுகள், மேற்கு ஜைந்தியா குன்றுகள், கிழக்கு ஜைந்தியா குன்றுகள் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மேகாலயா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிரபுஞ்சி செல்வதில் சிக்கல்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் ஒன்றான கிழக்கு காசி குன்றுகள் மாவட்டத்தில்தான் அதிகமான மழை பொழியக் கூடிய சிரபுஞ்சி அமைந்துள்ளது. சிரபுஞ்சியின் மலைகளில் இருந்து பார்த்தாலேயே வங்கதேச சமவெளி பரப்பு பகுதிகள் நன்றாகவே தெரியக் கூடும். Root Bridges எனப்படும் இரட்டை அடுக்கு வேர்பாலம், பிரம்மிப்பூட்டும் நீர்வீழ்ச்சிகள், மலையேற்றம் இவற்றுக்காக சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் குவியும் முதன்மை சுற்றுலா தலம் சிரபுஞ்சி. தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால் சுற்றுலா பயணிகளும் கவனமுடன் செல்ல வேண்டும் என்கின்றனர் மேகாலயா அரசு அதிகாரிகள்.