கோவையில் Dude திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் கீர்த்திஸ்வரன், நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருவரும் செல்பி எடுக்க முயன்றபோது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் சிலர் கீழே விழுந்ததால் அப்பகுதியில் சற்றே பதற்றம் நிலவியது.
கடந்த 17ஆம் தேதி தீபாவளி வெளியீடாக நடிகர் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் டியூட் திரைப்படம் வெளியானது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள சூழலில் படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தனர். அப்போது கல்லூரி மற்றும் திரையரங்குகளில் ரசிகர்களையும் மாணவ மாணவிகளையும் சந்திக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கோவை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன், “கோவை வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஐ லவ் யூ என்று சொல்கிறேன்.. ரொம்ப சப்போர்ட் பண்றீங்க , உங்க அன்புக்கு என்ன செய்ய போகிறேன் தெரியல. கோவை ரெஸ்பான்ஸ் அருமையாக உள்ளது” என்றார்.
அவர் பேசுகையில், டிஜே இடையில் பாடல்களை ஒளிபரப்பியதால் அப்போது நகைச்சுவையாக உங்கள் கல்யாணத்திற்கு வருகிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது அவரை பாட்டு பாடவும் , நடனம் ஆடவும் கூறியதால், மைக் வாங்கி காலேஜ் வந்தால் ராகிங் செய்வீர்களா என்று ஜாலியாக பேசினார்.
இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவருடன் செல்பி வீடியோ எடுத்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களையும் தாண்டி மாணவர்கள் திரண்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் ஆர்வத்தில் குவிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக மாணவர்கள் கீழே விழுந்ததால் அங்கு சற்றே சலசலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சில மாணவர்களுக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவையில் பிரதீப் ரங்கநாதன் செல்பி எடுக்க முயன்றபோது மாணவர்கள் காயம் அடைந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் சிலர் காட்டமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
