தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று (02-11-2025) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (03-11-2025) காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் – பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
நேற்று (02-11-2025) வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (03-11-2025) காலை 0530 மணி அளவில் வலுவிழந்தது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் நவம்பர் 5ம் தேதி ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
