வழக்கமான ஹீரோயினுக்குரிய லட்சணங்கள் இல்லாதபோதும், சில முகங்கள் சட்டென்று ரசிகர்களைக் கவரும். அதன்பிறகு, அவர்கள் ‘ட்ரேட்மார்க்’ ஆக மாறுவார்கள். அதற்குச் சில ஆண்டுகளாக உதாரணமாக இருப்பவர்கள் என்று நித்யா மேனன், சாய் பல்லவி போன்றவர்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் ‘கோர்ட் – ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ தெலுங்கு பட ஹீரோயினான ஸ்ரீதேவி அபல்லா.
அந்த படத்தில் ‘மேருவல்லி ஜாபிலி’ எனும் பாத்திரத்தில் நடித்தார். அவரது இருப்பே அதன் வெற்றியை அதிகப்படுத்தக் காரணமாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாகப் பல வாய்ப்புகள் அவரைத் துரத்துகின்றன. அதன் விளைவாக, புதிதாகத் தான் வாங்கிய எம்ஜி ஹெக்டர் காருக்கு பூஜை செய்கிற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதற்காக, அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
‘கோர்ட்’ படத்திற்குப் பிறகு வேறு தெலுங்கு படங்களில் நடிப்பதாக, இதுவரை ஸ்ரீதேவி அறிவிக்கவில்லை. ஆனால், புதிதாக ஒரு தமிழ் படத்தில் ‘கமிட்’ ஆயிருக்கிறார்.
அறம், ஹீரோ படங்களின் தயாரிப்பாளரும், தற்போது தயாராகிவரும் ‘அங்கீகாரம்’ படத்தின் நாயகனுமான கேஜே ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஸ்ரீதேவி ஹீரோயினாக இடம்பெற்றிருக்கிறார். ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இதனை இயக்குகிறார். ஜிப்ரான் இதற்கு இசையமைக்கிறார்.

பிரபல மலையாள நடிகரான அர்ஜுன் அசோகன் தொடங்கி அஜு வர்கீஸ், அபிஷேக் ஜோசப், அஸ்வின் குமார் ஆகியோரும் இடம்பெற்றிருப்பது ஒரேநேரத்தில் இப்படம் தமிழ், மலையாளத்தில் தயாராகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இவர்களோடு ‘டாடா’ ஹரிஷும் நடிக்கிறார்.
‘கோர்ட்’ படம் மூலமாகச் சத்தமில்லாமல் வெற்றிக்கோட்டைத் தொட்ட ஸ்ரீதேவி, அதே வழியில் தற்போது தமிழிலும் களமிறங்குகிறார். இந்தக் களத்தில் அவரது வெற்றி எப்படி அமைகிறது என்று பார்க்கலாம்..!