கரூர் துயர சம்பவம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு சார்பில் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரையில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் குழு நேற்று (செப்டம்பர் 30) கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து கரூரில் இருந்து கோவை வந்த எம்பிக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கோவை விமான நிலையத்தில் பேசிய தேஜஸ்வி சூர்யா எம்.பி கூறுகையில்,”கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த தகவல்களைப் பெற மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியபோது அவர்கள் எந்த வித பதிலும் அளிக்கவில்லை. கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு சார்பில் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கரூர் சென்றபோது இரு அதிகாரிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுவை சந்திக்கவோ, அவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ தவறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
காலை முதல் கரூர் சோக சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசியதாகவும் அதன் அடிப்படையில் ஐந்து விதமான கேள்விகளை இந்த குழு தமிழக அரசு முன்பாக வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
- தவெக பிரச்சார கூட்டத்திற்கு பெரிய இடத்தை கொடுக்காமல் சிறிய இடத்தை அனுமதிக்க காரணம் என்ன?
- விஜய் வரும் போது மின்வெட்டு நடந்ததற்கான காரணம் என்ன?
- அந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாத பலர் விஜய் வந்த 15 நிமிடத்திற்குள் உள்ளே வந்துள்ளனர். இவர்களெல்லாம் யார் என்ற கேள்வி எழுகிறது . விஜய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
- மேலும் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. ஏன் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு போடவில்லை. இவ்வளவு கூட்டம் வரும் என்பது காவல்துறைக்கு தெரியாதா?
- தனியார் மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்லாமல் எதற்காக 25 நிமிடம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றார்கள்.
விஜய் வந்தபோது செருப்பு வீசிய நபர்கள் யார் என்பது தெரியவில்லை . இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் போதாது. பொதுவாகவே அரசு அமைக்கும் ஒரு நபர் ஆணையம் என்பது அரசுக்கு சாதகமான அறிக்கையை தரும்.
அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற T20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த சூழலில் அது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் அந்த ஒரு நபர் ஆணையம் ஆர்சிபி நிர்வாகத்திற்கு எதிராகத்தான் அறிக்கை கொடுத்தார்கள். இதனால் ஒரு நபர் ஆணையம் போதாது என்று மக்கள் தெரித்தனர் என்றார்.