தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தவெக நடத்திய விழாவில் சினிமா பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘சர்வதேச மகளிர் தின விழா’ கொண்டாடப்பட்டது. இந்த அரசியல் கட்சி விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, மேடையில் சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
தலைமை ஆசிரியை தவெக மேடையில் நடனமாடிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. ஒரு அரசு ஊழியராகப் பணியில் இருக்கும் ஆசிரியர், பகிரங்கமாக அரசியல் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதும், மேடையில் நடனமாடியதும் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன.
புகாரின் அடிப்படையில், அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறியது குறித்து விசாரணை நடத்த பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு உத்தரவிடப்பட்டது. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணவேணி அரசியல் கட்சி விழாவில் பங்கேற்றதும், மேடையில் நடனமாடியதும் உறுதி செய்யப்பட்டது.
அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கக் கூடாது மற்றும் பொது இடங்களில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்ளக் கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மீறியதற்காகவும், ஆசிரியர் பணியின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்ததற்காகவும் கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
