ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET டெட்) கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. அதில், ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்- இதை விரும்பவில்லை எனில் ஆசிரியர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம்; ஆனால் ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என அதிரடியாக தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு, நேற்று (செப்டம்பர் 30) மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.