உலகமே கொண்டாடும் பாப் இசை தேவதை டெய்லர் ஸ்விஃப்ட்(Taylor Swift). இவருடைய ‘தி எராஸ் டூர்’ (The Eras Tour) இசை நிகழ்ச்சி, உலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த நிகழ்ச்சியாகச் சாதனை படைத்தது. அரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல் ஏங்கிய கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக, இப்போது ஒரு பிரம்மாண்ட விருந்து ஓடிடியில் காத்திருக்கிறது.
இது சினிமா படம் அல்ல… ‘கான்சர்ட் ஃபிலிம்’! முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது டெய்லர் ஸ்விஃப்ட் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரும் வழக்கமான திரைப்படம் (Feature Film) அல்ல.
இது ஒரு ‘கான்சர்ட் ஃபிலிம்’ (Concert Film). அதாவது, அவர் மேடையில் பாடிய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி, அதிநவீன கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டு, ஒரு சினிமா அனுபவத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தியேட்டரில் அல்லது அரங்கில் அமர்ந்து கச்சேரி பார்ப்பது போன்ற உணர்வை இது வீட்டிலேயே கொடுக்கும்.
என்ன ஸ்பெஷல்? “Taylor Swift | The Eras Tour | The Final Show” என்ற தலைப்பிலான இந்தக் கச்சேரி படத்தின் ட்ரைலர் இப்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. இது வரும் டிசம்பர் 12-ம் தேதி டிஸ்னி+ (Disney+) தளத்தில் பிரீமியர் செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான வெர்ஷனுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
- இதில் ‘தி டார்ச்சர்ட் பொயட்ஸ் டிபார்ட்மென்ட்‘ (Tortured Poets Department – TTPD) ஆல்பத்தின் பாடல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
- ரசிகர்களின் ஃபேவரைட் பாடலான ‘லாங் லிவ்’ (Long Live) பாடலை, டெய்லர் ஸ்விஃப்ட் கிட்டார் வாசித்தபடியே பாடும் (Acoustic Version) உருக்கமான காட்சியும் இதில் ஹைலைட்.
கூடுதல் சர்ப்ரைஸ்- ‘ஆவணத் தொடர்’ (Docuseries): ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இத்துடன் முடியவில்லை. டிசம்பர் 12 அன்று, கச்சேரி படத்துடன் சேர்த்து, “Taylor Swift | The Eras Tour | The End of an Era” என்ற 6 பகுதிகள் கொண்ட ஆவணத் தொடரின் முதல் இரண்டு எபிசோட்களும் வெளியாகின்றன!
டான் ஆர்காட் (Don Argott) இயக்கியுள்ள இந்தத் தொடர், மேடைக்குப் பின்னால் (Behind the Scenes) நடந்த சுவாரஸ்யங்கள், டெய்லரின் பயணம் மற்றும் இந்தச் சுற்றுப்பயணம் எப்படி உருவானது என்பதைச் சொல்லும். இதில் சப்ரீனா கார்பெண்டர் (Sabrina Carpenter), கிரேசி ஆப்ராம்ஸ், எட் ஷீரன் மற்றும் ஃப்ளோரன்ஸ் வெல்ச் போன்ற பிரபலங்களும் தோன்றவுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
உலக மிரள வைக்கும் சாதனை: இந்தச் சுற்றுப்பயணம் சும்மா இல்லை. வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என 5 கண்டங்களில், சுமார் 149 ஷோக்கள் நடத்தப்பட்டன. சுமார் 1 கோடி ரசிகர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள்.
- ஃபோர்ப்ஸ் (Forbes) தகவலின்படி, டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் 2 பில்லியன் டாலர் (நம்ம ஊரு காசுக்குச் சுமார் 16,000 கோடி ரூபாய்) வசூலித்து உலக சாதனை படைத்துள்ளது.
கண்ணீருடன் விடைபெறும் டெய்லர்: வெளியாகியுள்ள ட்ரைலரில் பேசும் டெய்லர் ஸ்விஃப்ட், “இந்தச் சுற்றுப் பயணத்தை முடிக்க நாங்கள் நீண்டகாலம் தயாரானோம். இன்றிரவு உங்களுக்காகக் கடைசி ஷோவை நடத்துகிறோம். என் வாழ்க்கையின் மிகவும் சிலிர்ப்பான அத்தியாயத்தில் அங்கம் வகித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி,” என்று ரசிகர்களைப் பார்த்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
கிளென் வெய்ஸ் (Glenn Weiss) இயக்கியுள்ள இந்த ‘ஃபைனல் ஷோ’, இசை ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் (Visual Treat) ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுவதும் உள்ள ‘ஸ்விஃப்டீஸ்’ (Swifties – ரசிகர்கள்) டிசம்பர் 12-க்காகத் தவமிருக்கிறார்கள்!
