டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அமலாக்கத்துறை 47 பக்கங்கள் கொண்ட விரிவான பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது. Tasmac case ED reply
கடந்த மார்ச் 6 முதல் 8 வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் பிறகு மார்ச் 13 ஆம் தேதி, டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை.
ரெய்டில் மனித உரிமை மீறல் – டாஸ்மாக்
இந்நிலையில், இந்த ரெய்டு நடவடிக்கைகளை சட்டப்படி சந்திப்போம் என மார்ச் 14 ஆம் தேதி சட்டமன்ற வளாகத்தில் கூறினார் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதன்படியே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்றும் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு, டாஸ்மாக் விவகாரத்தில் மார்ச் 25-ஆம் தேதி வரை எந்தவித மேல் நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இருந்து தாங்கள் இருவருமே விலகுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த அமர்வில் வழக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறையின் விரிவான பதில்!
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் 47 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தங்கள் மேல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதிலளித்திருக்கிறது அமலாக்கத்துறை.
ED உதவி இயக்குனர் விகாஸ் குமார் கையொப்பமிட்ட 47 பக்க பதில் பிரமாணப் பத்திரத்தை கூடுதல் சொலிசிட்டர்ஸ் ஜெனரல் எஸ்.வி. ராஜு மற்றும் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ED சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?
“டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் சில தனியார் மதுபான ஆலை நிறுவனங்கள் மீதான பணமோசடி புகார் மீது அமலாக்கத்துறை நடத்த ஆரம்பித்துள்ள முறைப்படியான விசாரணைக்கு டாஸ்மாக் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

டாஸ்மாக் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களின் தன்மையே கேள்விக்குரியது. அவற்றை விசாரணைக்கே ஏற்கக் கூடாது.
பொது நிதியைக் கையாளும் டாஸ்மாக்!
விசாரணை என்ற போர்வையில் தனது ஊழியர்களை தொந்தரவு செய்ததாக டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட ஊழியரும் எந்தவிதமான துன்புறுத்தல் அல்லது மனித உரிமை மீறல் பற்றிய புகாரை எங்கள் (ED) மீது சொல்லாதபோது டாஸ்மாக் நிறுவனம் எவ்வாறு அத்தகைய ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
டாஸ்மாக் என்பது தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான நிறுவனம். பல்லாயிரம் கோடி வருடாந்திர வருவாய் கொண்ட பெரிய அளவிலான பொது நிதியைக் கையாள்கிற நிறுவனம். இப்படிப்பட்ட நிறுவனத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் (DVAC) பதிவு செய்த பல முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில்தான் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பொது நிதியை கையாள்கிற பொது நிறுவனத்தின் மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது, அதை விசாரிப்பது பொது நலனுக்காகத்தான்.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களின் அலுவலகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத பணம், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தல், இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெறுதல், மதுபானங்களை வழங்குவதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலைகளுக்கு இடையேயான தெளிவற்ற பரிவர்த்தனைகள் மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய FIR-கள் ஏற்கனவே உள்ளன.
சாட்சியாய் இரு வங்கி ஊழியர்கள்!
1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள், 2022-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் திட்டமிடப்பட்ட குற்றத்தின் வகையில் வருவதால் 2025 மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் ED சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களான இரண்டு சுயாதீன சாட்சிகள் முன்னிலையில்தான் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் மீது எந்தவித வற்புறுத்தல், அச்சுறுத்தல், தூண்டுதல் உள்ளிட்ட எந்த வெளிப்புற அழுத்தத்தையும் செலுத்தாமல் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் மட்டுமே சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க முடியாது.
பொதுமேலாளர் சங்கீதா தங்கியது ஏன்?
மேலும், பெண் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தாமதப்படுத்தியதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியிருக்கிறது. இரவு நேரத்திற்கு முன்பே அனைத்து பெண் ஊழியர்களும் வீட்டிற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், டாஸ்மாக் பொது மேலாளர் (நிர்வாகம்) சங்கீதா தனது சொந்த விருப்பப்படியே அலுவலகத்திலேயே தங்கியிருந்தார்.

முழு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டன. டாஸ்மாக் ஊழியர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்கு மேல் எந்த நபரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
அந்தக் கடிதத்தில் ஏன் எதுவும் சொல்லவில்லை?
சோதனை நடவடிக்கையின் போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், பொது மேலாளர் (நிர்வாகம்) சங்கீதா, மற்றும் துணை பொது மேலாளர் (கொள்முதல் மற்றும் விற்பனை) எம். ஜோதி சங்கர் ஆகியோர் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாங்கள் கேட்ட சில ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரி அமலாக்கத்துறைக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.
அந்த கடிதங்களில் எங்கும், டாஸ்மாக்கின் மேற்கூறிய மூன்று அதிகாரிகளும் சோதனை நடவடிக்கைகளில் எந்த முறைகேடும் நடந்ததாகக் கூறவில்லை. இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள வற்புறுத்தல், அடிப்படை உரிமைகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எதையும் எழுப்பவில்லை. PMLA பிரிவு 17 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தங்களது வாக்குமூலங்களையும் அவர்கள் திரும்பப் பெறவில்லை.
எனவே, தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறப்படும் பிரச்சினைகளை எழுப்பி டாஸ்மாக் நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய ரிட் மனுக்கள், திட்டமிட்டு சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதாகும், ”என்று ED கூறியது.
இந்த வழக்கு ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Tasmac case ED reply