தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்று பாஜகவினர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான கருத்தை நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., “தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது பணிபுரியும் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாணவர்களுக்கு அந்தந்த தாய்மொழிகளில் கற்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏதேனும் திட்டங்கள் வகுத்துள்ளனவா? ” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வித் துறையின் இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி,
”தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்பிப்பதற்காக பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதலாக, 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் மெய்நிகர் அகாடமி (TVA) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று பதிலளித்துள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களில் ரெகுலர் போஸ்டிங் அதாவது நிரந்தர பதவிகளில் இல்லை மாறாக பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 பேர் இருக்கிறார்கள் அவ்வளவுதான். tamilnadu KV Tamil teachers
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி, “தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது” என குறிப்பிட்டுள்ளார். KV Tamil teachers