தமிழ்நாடு அரசுக்கும், சர்வம் AI நிறுவனத்திற்கும் இடையே ரூ.10,000 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தொழில்நுட்ப Deep Tech வேலைவாய்ப்புகளை அளித்திடும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக அரசு அமைந்தது முதல் தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளையும் ஈர்த்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தநிலையில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் AI (செயற்கை நுண்ணறிவு) நிறுவனம் ஒன்றுடன் தமிழக அரசு ஒப்பந்த போட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (ஜனவரி 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.அர்.பி.ராஜா, “சர்வம் AI நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு உயர்தொழில்நுட்ப ‘டீப் டெக்’ (Deep Tech) வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழகத்திற்கு ஒரு செயற்கை தொழில்நுட்ப தரவு மையம் அமைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் டேட்டாவை, பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் முதல் முயற்சி” என்றார்.
இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டை ஏஐ ஸ்டார்ட்-அப்களின் தலைமையிடமாக மாற்றும் என்றும், வெளிநாட்டு ஏஐ நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கும் என்றும் கூறினார்.
தமிழக warehouse policy போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த ஒரு திட்டம் வெளியிடப்படுகிறது. சேமிப்புக் கிடங்கு வசதிகளை மேம்படுத்தவும், பொது-தனியார் பங்களிப்புடன் நவீனப்படுத்தவும் இக்கொள்கை உதவும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் காமகோடி, “
அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதை ஏஐ மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் விவசாயம் , கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க இது உதவும்” என்றார்.
