இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதில் போட்டி நிலவி வருவதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கம்யூனிட் கட்சியின் மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் மாநிலச் செயலாளர் முத்தரசன் பதவி காலம் நிறைவடைவதால் புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த பேசப்பட்டது. இன்று பேரணி பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவு பெற உள்ளது.
இந்த மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர்கள் 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மாநிலச் செயலாளர் பதவிக்கு மாநில துணைச் செயலாளர் வீர பாண்டியன் மற்றும் மாநில குழு உறுப்பினர் சந்தானம் இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து 31 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியை தேர்வு செய்ய உள்ளனர். நிர்வாக கமிட்டி தேர்வு செய்யப்பட்ட பின்னர் , அவர்கள் கூடி மாநில செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், பொருளாளர், ஏழு செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்வார்கள்.
இதனால் தேர்தல் அடுத்த 15 நாட்களுக்கு பின்னர் நடத்தப்படும் என முடிவெடிக்கப்பட்டுள்ளது. அதுவரை முத்தரசனே மாநிலச் செயலாளராக நீடிப்பார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.