பாமக இளைஞரணி தலைவராக அக்கட்சியின் கவுரவத் தலைவரான ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியினர் இரண்டாக பிரிந்து செயல் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 2) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ஜி. கே. மணியின் மகன் தமிழ் குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்குவதாக அறிவித்தார். அதற்கான நியமன உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியும், ராமதாஸும் தமிழ் குமரனிடம் வழங்கினார். இச்சம்பவம் அக்கட்சியினரிடேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக வானூர் அருகே நடந்த பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தனை நியமித்தார். இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி ராமதாஸ் மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்த மைக்கை வாங்கி, நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று ஆவேசமாக தெரிவித்துவிட்டு கோபமாக மேடையில் மைக்கை வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அந்த மேடையில் தான் ராமதாஸ் – அன்பு மணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தமிழ்க்குமரனை, பாமக இளைஞரணித் தலைவராக நியமித்துள்ளது டாக்டர் ராமதாஸின் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.