ADVERTISEMENT

நம்பிக்கை போச்சு.. காங்கிரஸில் பல பேர் விசில் அடித்துக்கிறார்கள்.. – தமிழிசை

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸில் ஒரு பகுதியினர் ஆட்சியில் பங்கு என்று வெளிப்படையான கருத்துகளை தெரிவித்த நிலையில் கூட்டணியில் சலசலப்பு நீடித்து வருகிறது. மேலும் காங்கிரஸில் சிலர் தவெகவில் இணைவதில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைச் சுட்டிக்காட்டி பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸில் பலருக்கும் விசில்தான் பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று (பிப்ரவரி7) பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “காங்கிரஸில் பல பேர் சூரியனைப் பார்த்துக் கும்பிடுவதற்கு பதிலாக விசிலடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஏனென்றால் அவர்களுக்கு விசில்தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக தோற்றுப்போகக்கூடிய கழகம் என்பதனால்தான் ஒவ்வொருவராக இந்த எச்சரிக்கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கு முதலிலே போய்விட்டது.

ADVERTISEMENT

இன்றைக்கு அண்ணன் திருமாவளவனுக்கும் அந்த நம்பிக்கை போய்விட்டது. அதனால நாங்கள் அழுத்தம் கொடுக்கமாட்டோம். ஆனா வெளியேறுவோம் என்கிறார். யாரெல்லாம் திமுக கூட்டணியை விட்டு வெளியேறக் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிறைய பேர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் சேர வேண்டும் என்றார்களோ , யாரெல்லாம் அணுகுகிறார்களோ அவர்கள் எல்லாம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களது கட்சி சார்பில் அண்ணன் துரைசாமி அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று நேற்று எங்கள் தலைவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இருந்து யாரெல்லாம் வெளியே வர வேண்டும் என நினைக்கிறீர்களோ அண்ணன் துரைசாமியை அணுகலாம். இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாகப் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி இருக்கிறது. அவர்களது சூரிய ஒளி எந்த விதத்திலும் மக்களுக்குப் பலன் தராமல் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கே மக்களுக்காக இலை போட்டு, ரெட்டை இலை போட்டு, குக்கரில் சாதம் செஞ்சு அதைச் சைக்கிளில் கொண்டு மக்களுக்குச் சென்று அவர்கள் முகம் தாமரை போல மலர்வதை பார்த்துவிட்டு, சாப்பாடு மட்டுமில்ல, அதில் மாம்பழமும் வைத்துக் கொடுத்து, நாங்கள் நிச்சயமாக மக்களின் வயிறு நிரம்ப பாடுபடுவோம்.

ADVERTISEMENT

நீங்கள் வெறும் கையை வைத்துக்கொண்டு ஓட்டப் பானையில் கொண்டு மக்களுக்கு எதுவுமே கொடுக்காமல் வெறும் பானைகளையும், வெறும் கைகளையும் காண்பிக்கப் போகிறீர்கள். அதனால்தான் பானைகளும், கைகளும் உங்களோடு இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எங்களுக்கு ஓட்டு அளிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share