மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டு திடலில் பெரியார் படம் வைக்கப்பட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாநாடு நடத்துபவர்களின் கொள்கைக்கு ஏற்ப அங்கு படம் இருக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று மாலை NDA கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நேற்று முன் தினம் மாநாட்டு திடலில் தந்தை பெரியாரின் படம் வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது. பாஜக கொடுத்த அழுத்தத்தால் எடப்பாடி பழனிசாமி பெரியாரின் புகைப்படத்தை நீக்கிவிட்டார் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் இந்த செயலை விமர்சித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 2) சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை மாநாட்டு திடலில் பெரியார் படம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “நீங்கள் இந்து கோயிலுக்கு செல்ல மறுக்கிறீர்கள். உங்கள் மாநாட்டில் இந்து மக்களை மதிக்கிறோம். 85 சதவிகிதிம் வரை இருக்கும் இந்து மக்களை மதிக்கும் வகையில் முருகன் படம், காளியம்மன் படம் வைப்பது இல்லை தானே. மாநாடு நடத்துபவர்களின் கொள்கைக்கு ஏற்ப அங்கு படம் இருக்கும். இதுதான் உண்மை என்றார்.
பிரதமரின் வருகை குறித்து பேசுகையில், உதாசீனப்படுத்தப்பட்ட மற்றும் புண்படுத்தப்பட்ட இந்துக்களின் உணர்வுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை ஒரு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
முருகன் கோயிலில் விளக்கேற்ற முடியவில்லையே என்று கலங்கிய சாதாரணத் தாய்மார்களுக்கு, பிரதமரின் வருகை ஒரு தார்மீக ஆதரவை (Moral Support) வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மறைந்த பூர்ணச்சந்திரனின் மனைவியை நேரில் சந்தித்து பிரதமர் ஆறுதல் கூறியது, “யாரையும் நான் புறந்தள்ளவில்லை, அனைவருக்கும் நான் உடன் இருக்கிறேன்” என்ற செய்தியை தெரிவித்துள்ளார்.
