தமிழன் கங்கையை வெல்வான்… மோடியை கடுமையாக தாக்கி பேசிய கனிமொழி

Published On:

| By Kavi

உலகின் தலைசிறந்த தலைவர் யார் தெரியுமா? கங்கைக்கொண்ட சோழபுரத்துக்கு வந்தீர்கள்… கற்றுக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்று பிரதமர் மோடியை எம்.பி.கனிமொழி கடுமையாக விமர்சித்தார். tamilan Tamil will conquer the Ganges

மக்களவையில் இன்று (ஜூலை 29) ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து காட்டமாக பதிலளித்தார்.

ADVERTISEMENT

அவர் பேசி அமர்ந்ததும், எழுந்து பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “நாங்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் போல் உள்துறை அமைச்சர் பேசினார். தேச பக்தியில் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல. நமது படை வீரர்களுக்காக பேரணி நடத்தியவர் தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்தது இல்லை.

நாங்கள் எதிர்க்கட்சி இருக்கையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அமர்வோம் என்று நேற்று உள்துறை அமைச்சர் சொன்னார். அவ்வளவு காலம் எதிர்க்கட்சி இருக்கையில் அமர்வதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ADVERTISEMENT

ஜனநாயக நாட்டில் மக்கள் தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள். அவர்கள் தான் எங்களை இங்கு உட்கார வைத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையமோ சிறப்பு தீவிர திருத்தமோ (SIR) இல்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னதாகவும் அவர்களுக்கு(பாஜகஅரசு) தமிழகத்தின் கலாச்சாரத்தை பெருமையை கண்டுப்டித்துவிடுவார்கள். ஆனால் கீழடி அறிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்துதான் இந்தியாவின் வரலாறு எழுதப்படும். இதை முதல்வர் ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகைத் தந்தீர்கள். பேரை நினைவில் கொள்ளுங்கள்… கங்கைகொண்டசோழபுரம். கங்கையை கொண்டவன் அவன், கங்கையை வென்றவன் அவன். தமிழன் கங்கையை வெல்லுவான். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எங்கள் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல், 50, 100 ஆண்டுகளுக்கு முன்னாள் சென்று அன்று நடந்ததை குற்றசாட்டிக்கொண்டிருக்கிறீகள். இன்று என்ன நடக்கிறது என்று பேசுங்கள். உங்கள் ஆட்சி நடக்கிறது.

நாட்டின் மக்களுக்கு என்ன நடந்தாலும் நீங்கள்தானே பொறுப்பு. அவர்களை ஏன் உங்களால் காப்பாற்றமுடியவில்லை. உங்கள் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. உங்களுக்கு எதிராக பேசிவிட்டால் தேச விரோதிகள் என்கிறீர்கள்.

பஹல்காம் தாக்குதலை எப்படி தடுக்க தவறினீர்கள்? தாக்குதலுக்கு முன் புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன?. பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? பாதுகாப்பான இடம் என்று உங்களை நம்பித்தானே சுற்றுலா வந்திருப்பார்கள்? ஆனால் அவர்கள் உயிரை இழந்துவிட்டார்கள். இதற்கு மாநில அரசு பொறுபேற்க வேண்டுமா? மத்திய அரசு என்ன செய்கிறது. ஒன்றும் செய்யவில்லை.

பஹல்காமின் வரைபடங்களுக்கான கோரிக்கைகளை ஒரு அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து பெற்று வருகிறது என்பதையும், இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கும் நிறுவனங்களில் ஒன்று பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதையும் அறிய மத்திய அரசு எப்படி தவறியது.

காஷ்மீரில் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன இழப்பீடு தரப்போகிறீர்கள். காஷ்மீரில் தங்கும் விடுதிகள், சுற்றுலா வசதிகளில் பலர் முதலீடு செய்துள்ளனர்.

உங்களுடைய அரசியல், வெறுப்புபேச்சால் இந்தியாவை ஏன் பிளவுபடுத்துகிறீர்கள்.

உங்களுடைய சித்தாந்தங்கள்… நீங்கள் இந்த நாட்டில் விதைக்கக்கூடிய விஷ விதைகள்…இவை வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனால் இந்த நாடு என்று வரும்போது, இந்நாட்டின் இறையாண்மையை நான் நம்புகிறோம்.

ஆனால் இன்னொரு நாட்டில் இருக்கக்கூடிய தலைவர் குறைந்தபட்சம் 25 முறை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான்.. நான்… நான் என்று சொல்கிறார். நான் அவரை நம்பவில்லை. உஎன்னுடைய அரசாங்கத்தை நம்புகிறேன். ஆனால் உங்களுடைய பதில் என்ன? ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். இதுதான் வெளியுறவு கொள்கையா? என கேள்விகளை எழுப்பினார்.

அப்போது ஆளும் கட்சி தரப்பு எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

எனினும் தொடர்ந்து பேசிய கனிமொழி, “ விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? அவர் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி இதுபோன்று நடக்காது என்று சொல்கிறாரே தவிர? அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை” என்று விமர்சித்தார்.

“ஒரே ஒரு விஷயம் தான் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது. இது ‘நீட்டிப்பு’ (extension) அரசாங்கம் என்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், அதிகாரிகளின் பதவிதான் நீட்டிக்கப்படுகிறது. ரா, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறை அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்படுகிறது. உங்கள் அரசாங்கத்தின் இரண்டாம் நிலை அதிகாரிகள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா. (கனிமொழி இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது பின்னால் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்துறை செயலாளர், பாஜக தலைவர் என்று குறிப்பிட்டனர்)

“நான் உலகின் சிறந்த தலைவன்” என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. ஒரு துணிச்சலான ராஜா இரத்தக்களரிப் போர்களை வெல்பவர் அல்ல, மாறாக போர் இல்லாமல் அமைதியை உறுதி செய்பவர். அப்படிப்பட்ட அரசனாகத்தான் கங்கைக்கொண்ட சோழன் இருந்தான்.

வந்தீர்கள், பாடம் கற்றுக்கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் அவர், “நீங்கள் இன்னும் பணிவைக் கூட கற்றுக்கொள்ளவில்லை; 2008 மும்பை தாக்குதலின் போது பிரதமர் (மன்மோகன் சிங்) நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து விஸ்வகுரு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கர்னல் சோபியா குரேஷியை அவமதித்த மத்தியப் பிரதேச அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட்டுவிட்டு, முன்னாள் பிரதமர் நேரு பற்றி பேசுகிறீர்கள். சொல்லப்போனால் காங்கிரஸ் கூட இந்தளவுக்கு நேருவை நினைவில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களால் தமிழ்நாட்டில் பெரியார், அம்பேத்கரை மீண்டும் படிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதேபோல் அனைத்து இடங்களில் நேருவையும் இளம் தலைமுறையினர் படிக்க தொடங்கிவிட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார். tamilan Tamil will conquer the Ganges

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share