’ஜனவரி ஸ்டிரைக்’ கைவிடப்படுமா? அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

Published On:

| By Mathi

Jactogeo talks

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (JACTTO-GEO) பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று (டிசம்பர் 22) பேச்சுவார்த்தை நடத்துகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் சங்கங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, JACTTO-GEO தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 18-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது; அதைத் தொடர்ந்து டிசம்பர் 13-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

ADVERTISEMENT

இதனிடையே பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் கேட்டிருந்தது. இதற்கு ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த பின்னணியில் இன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாவிட்டால், வரும் டிசம்பர் 27 அன்று வேலைநிறுத்த மாநாட்டை நடத்தி, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக JACTTO-GEO திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share