தேசிய அளவில் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (StartupTN) சார்பில் அக்டோபர் 9 & 10 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் “உலக புத்தொழில் மாநாடு – 2025″ (GLOBAL STARTUP SUMMIT – 2025) யை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 250 பிரதிநிதிகள் ஸ்டார்ட் அப் தொழில் குறித்து கருத்துக்களை பகிர்கின்றனர். மேலும், சர்வதேச நாடுகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை உலக ஸ்டார்ட் அப் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, இந்த மாநாடு நடத்துவதற்கு உகந்த இடமாக கோயம்புத்தூர் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். மாநிலத்தின் வேலைவாய்ப்பை அதிகரித்து குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும். அந்த வகையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தொழில்துறையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அந்த வகையில் புதிய சிந்தனைகள் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சார்ந்து எடுத்து வருகிறது. குறிப்பாக பெண்கள் இளைஞர்கள் மாற்று பாலினத்தவர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவங்கி மேம்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் தொழிலுக்கான மையமாக விளங்குகிறது. நான்காண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பதிவு ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. 2032 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 12,000 கடந்து பதிவாகியுள்ளது. குறிப்பாக இதில் 50 சதவீதத்தினர் பெண்களை தலைமையாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாகும்.
தேசிய அளவில் சிறந்த ஸ்டார்டப் நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. சர்வதேச அறிக்கைகளின் படி ஆசிய அளவில் 18 வது இடத்தில் ஸ்டார்ட் அப் தொழிலுக்கு உகந்த நகரமாக சென்னை நகரம் உள்ளது. நிதி ஆயோக்கின் அறிக்கை தமிழ்நாடு ஸ்டார்டப்களுக்கான முன்மாதிரி மாநிலமாக அங்கீகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் டாலராக இருந்த தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டு 6 மில்லியன் டாலரை எட்டி உள்ளது. இது தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வெளிக்காட்டுகிறது.
தேசிய அளவிலும் தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பதிவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஸ்டார்ட் தொழில் வளர்ச்சி என்பது பெரும் நகரங்களை மட்டும் மையமாகக் கொண்டு இல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்பதற்காக 11 வட்டார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொழில் திறன் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஸ்டார்ட் அப் துவங்குபவர்களுக்கான ஆதார நிதியாக இந்த ஆண்டு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளிலும் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் ஸ்டார்ட் அப் வளர்ச்சி சமூக நீதி அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற வகையில் இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்திருக்கும். இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 21 சர்வதேச நாடுகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது இது தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும்’ என முதல்வர் பேசினார்.