தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று பிப்ரவரி 17-ந் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் ஜனவரி 20-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று சட்டப்பேரவை கூடுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்- நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில், பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள், உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் இடம் பெறும் என்பது எதிர்பார்ப்பு.
இதேபோல வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யும்.
