ரவிக்குமார்
சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் முழு உருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. “கார்ல் மார்க்ஸுக்கு சிலை வைக்கிறார்கள். அவரை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே மறந்து விட்டனர். கார்ல் மார்க்ஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா?” என பாஜகவைச் சேர்ந்தவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருக்கிறார்.
ஒரு ஆளுமைக்கு சிலை வைப்பதற்கு அவர் அதற்குத் தகுதியானவரா என்று முதலில் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ் அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர். அவரது சிந்தனைகளின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் கோடிக்கணக்கான மக்களுக்கு விடுதலையைத் தந்தன.

பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவது மனித குல மேம்பாட்டுக்கு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அவரைப் போல அறிவியல் பூர்வமாக நிறுவியவர் வேறு எவரும் இல்லை. அதனால்தான் இந்திய அரசமைப்புச் சட்டமும் அவரது சிந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவை “இறையாண்மை கொண்ட, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” என அறிவித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தனையை முன்மொழிந்த கார்ல் மார்க்ஸின் சிலையைத் தமிழ்நாட்டில் நிறுவுவது பொருத்தமானதாகும்.
கார்ல் மார்க்ஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று தமிழிசை கேட்டிருக்கிறார். அது அறியாமையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்வி ஆகும். ஏனெனில், இந்தியாவைப் பற்றியும் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பற்றியும் பல்வேறு கருத்துகளை கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாட்டைப் பற்றிய குறிப்புகள்

1853க்கும் 1858க்கும் இடையில் கார்ல் மார்க்ஸ் ’நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ பத்திரிகைக்கு இந்தியா குறித்து முப்பத்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் பின்னர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன . கிபி 664 முதல் 1858 வரையிலான இந்திய வரலாறு குறித்து அவர் அந்தக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். இந்தியாவில் மொகலாயர் ஆட்சி; பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த போர்கள்; கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல் முதலானவைப் பற்றி அவரால் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள் இன்றைய வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும் உதவக்கூடியவை. அவர் ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனில்’ எழுதியுள்ள கட்டுரைகளிலும், அவர் தொகுத்து வைத்திருந்த குறிப்புகளிலும் தமிழ்நாடு பற்றிய அவரது கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
சித்திரவதை ஆணையம்
சிப்பாய்க் கலகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கும் கட்டுரைகளில் பிரிட்டிஷ் அரசு அமைத்த சித்திரவதை ஆணையத்தின் ( torture commission) அறிக்கையில் உள்ள விவரங்களை எடுத்தாண்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டில் நடந்த சம்பவமொன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
1854 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான சித்திரவதை குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தில் இருந்த ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்’ எழுப்பப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடந்த ஒரு விவாதத்தின் போது, ‘வரிகளைச் செலுத்தும்படி விவசாயிகளைக் கட்டாயப்படுத்த, உள்ளூர் அதிகாரிகளால் சித்திரவதை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் டான்பி சேமோர் என்பவர் அதைப்பற்றிப் பேசினார். அதையடுத்து பிரிட்டிஷ் பத்திரிகைகளும் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தன. ‘தி டைம்ஸ்’ பத்திரிகை “இந்தியாவில் நடக்கும் சித்திரவதை” பற்றி எழுதியது. ‘பஞ்ச்’ பத்திரிகையும் அது குறித்து ஒரு நையாண்டித் துணுக்கை வெளியிட்டது. அதன் காரணமாக இங்கிலாந்திலிருந்த இயக்குநர்கள் குழுவின் அவை ( court of directors) மெட்ராஸ் அரசாங்கத்திடம் “ஒரு முழுமையான விசாரணையை’ நடத்தவும், அந்த விஷயம் குறித்து ஒரு முழுமையான அறிக்கையைத் தங்களுக்கு வழங்கவும்” உத்தரவிட்டது.
அதன்படி, 1854 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, “அரசாங்க வரிகளை வசூலிக்கும் நோக்கத்திற்காக, அரசின் உள்ளூர் ஊழியர்களால் சித்திரவதை பயன்படுத்தப்படுவது” குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. பின்னர் இந்த விசாரணையின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டு, “வழக்குகளில் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக காவல்துறையும் சித்திரவதையைப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும்” அந்த கமிஷனின் விசாரணை வரம்பில் சேர்க்கப்பட்டன. சித்திரவதை ஆணையம் ( torture commission) என அறியப்படும் அந்த ஆணையம் 1855 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

தமிழ்நாட்டில் நடந்த சித்திரவதைகளைப்பற்றி மார்க்ஸ்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியர்கள் சித்திரவதை செய்யப்பட்டது பற்றி நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிகையில் 17-9-1857ல் கார்ல் மார்க்ஸ் கட்டுரை எழுதியுள்ளார் .
சித்திரவதை ஆணையத்தின் அறிக்கையிலிருந்து கார்ல் மார்க்ஸ் சில பகுதிகளை அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். வரிகட்டாததற்காகவே பெரும்பாலோர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மற்ற காரணங்களுக்காகவும்கூட சித்திரவதை முறை கையாளப்பட்டுள்ளது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின்மீது ரயில்வே பாலம் கட்டும் வேலை நடந்தபோது, கொள்ளிடம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து விறகு, கரி, மரம் முதலான பொருட்களைத் தருமாறு தாசில்தார் கேட்டதாகவும்,
அப்படி தராததால் பன்னிரெண்டு பேரை விட்டு தன்னைப் பிடித்து இழுத்துச் சென்று பல்வேறு விதங் களில் கேவலப்படுத்தியதாகவும் கொள்ளிடத்தைச் சேர்ந்த பிராமணர் ஒருவர் புகார் அளித்துள்ள விவரம் மார்க்ஸின் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. “இது குறித்து சப்கலெக்டர் டபிள்யூ. கேடெல் என்பவரிடம் நான் புகார் செய்தேன். அவர் இதுபற்றி விசாரிக்கவில்லை, என் புகாரையும் கிழித்துப் போட்டுவிட்டார். கொள்ளிடம் பாலம் கட்டும் பணியை அதிக செலவில்லாமல் ஏழைகளின் உழைப்பைக் கொண்டு முடித்து, அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்க அவர் விரும்புவதால் தாசில்தார் செய்த கொலையின் தன்மை எதுவாக இருந்தாலும் அவர் அதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை” என்று அந்த பிராமணர் கூறிய விவரம் கார்ல் மார்க்ஸால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சித்திரவதை என்பது பிரிட்டிஷ் ஆட்சியின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாயிருந்தது. “அந்த ஆட்சியின் தன்மையைக் கூறவேண்டுமெனில் சித்ரவதை என்பது அதன் வர்த்தகக் கொள்கையின் உயிரோட்டமான நிறுவனமாயிருந்தது” என மார்க்ஸ் எழுதியுள்ளதையும் (The Indian Revolt) இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.
1857 இல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது இந்தியர்கள் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் இந்தியாவில் இங்கிலாந்து நடந்துகொண்ட முறையின் எதிர்விளைவுதான் எனவும் மார்க்ஸ் வாதிட்டுள்ளார்.
கார்ல் மார்க்ஸின் குறிப்புகளில் தமிழ்நாடு
கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளில் மட்டுமின்றி அவர் தொகுத்து வைத்திருந்த வரலாற்றுக் குறிப்புகளிலும் தமிழ்நாட்டைப் பற்றிய பல்வேறு விவரங்களும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. அந்தக் குறிப்புகள் சோவியத் புரட்சிக்குப் பிறகு மாஸ்கோவிலிருந்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ராஸ் பற்றிய பதிவுகள் உள்ளன.
கடலூரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றுவதற்கு பிரிட்டிஷ் படைக்கும் பிரெஞ்சு படைக்கும் இடையே நடந்த சண்டைகள் விரிவாக மார்க்ஸால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராமாயணத்தைப் பற்றிய பதிவையும் கார்ல் மார்க்ஸின் குறிப்புகளில் பார்க்க முடிகிறது. “ ராமாயணம் அயோத்தியின் மன்னரான ராமரின் வீரச் செயல்களைப் போற்றுகிறது; அவர் கி.மு. 14 ஆம் ஆண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த காவியத்தின்படி, அவர் தக்காணம் மற்றும் இலங்கையின் மீதான படையெடுப்பில் இந்துக்களின் வெற்றித் தலைவராக இருந்தார்; அந்தப் புராணப் படையெடுப்பின் போது, இந்துக்கள் தக்காணத்தில் பல நாகரிகமடைந்த தேசங்களைக் கண்டனர்: தமிழ் மொழி பேசும் தமிழர்கள்; தெலுங்கு நாட்டைச் சேர்ந்தவர்கள்- அவர்களின் தாய்மொழி தெலுங்காக இருந்தது. அவற்றுள் மிகவும் பழமையான அரசுகள் தமிழ் அரசுகளாகும்.” என மார்க்ஸ் எழுதியுள்ளார்.

“ கி.மு. சுமார் 5 ஆம் நூற்றாண்டில், பாண்டிய நாடு அதே பெயருடைய ஒரு இடையர் மன்னனால் நிறுவப்பட்டது; அது ஒரு சிறிய நாடு; அதன் தலைநகரம் பழமையான மதுரை நகரம், மற்றும் அதன் பிரதேசப் பரப்பு கர்நாடகத்தின் தென்கோடியில் உள்ள தற்போதைய மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை உள்ளடக்கியது; கி.பி. 1736 வரை சுதந்திரமாக இருந்தது, பின்னர் ஆற்காடு நவாபினால் கைப்பற்றப்பட்டது.
சோழ நாடு, அங்கு தமிழ் மொழி பேசப்பட்டது; 1678 இல், வெங்கொஜி என்ற மராட்டியத் தளபதி தஞ்சாவூரின் ஆட்சியைப் பிடித்தார்.
சேர நாடு என்பது திருவிதாங்கூர், கோயம்புத்தூர் மற்றும் மலபாரின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு சிறிய மாநிலமாக இருந்தது” என கார்ல் மார்க்ஸின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.
பழைய தக்காணத்தில் ஐந்து மொழிகள் பேசப்பட்டன
(1) திராவிட நாட்டில், அதாவது, பெங்களூர் வழியாக, மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக கோயம்புத்தூர் மற்றும் கோழிக்கோடு வரை செல்லும் கோட்டால் சூழப்பட்ட தென்கோடியில் பேசப்படும் மொழி தமிழ்;
(2) வடக்கு மற்றும் தெற்கு கனராவில் பேசப்படும், தெலுங்கின் ஒரு கிளைமொழியான கன்னடம்;
(3) மைசூர் மற்றும் அதற்கு வடக்கே உள்ள நாடுகளில் பேசப்படும் தெலுங்கு;
(4) தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படும் மராத்தி,
இதன் எல்லைகள் பின்வருமாறு:

வடக்கு, சாத்பூரா மலைகள்; தெற்கு, தெலிங்கானா எனப்படும் தெலுங்கு நாடு; கிழக்கு, வர்தா நதி; மேற்கே, மலைகள்;
(5) ஒரிசாவில் பேசப்படும் ஒரு கரடுமுரடான கிளைமொழியான ஒரியா. ஒரிசாவுக்கும் மராட்டிய நாட்டிற்கும் இடையில் கோண்டுகள் வசிக்கின்றனர், அவர்கள் ஒரு கரடுமுரடான பேச்சுவழக்கைப் பேசுகிறார்கள்.” என கார்ல் மார்க்ஸ் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ரயத்துவாரி வரிவிதிப்பு முறையைப் பற்றியும் கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார். “ சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறை சர் தாமஸ் மன்றோவால் நிறுவப்பட்டது ; இது முதன்முதலில் சென்னை மாகாணத்தின் வருவாய் நிர்வாகத்தின் அடிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது; ஆனால், 1820 வரை அது நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது பின்வருமாறு செயல்பட்டது:
பயிர்களின் விளைச்சலையும் தரத்தையும் மதிப்பிடுவதற்குப் போதுமான அளவு பயிர்கள் வளர்ந்திருந்தபோது, அரசாங்க வருவாய் அதிகாரிகள் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு வருடாந்திரத் தீர்வையை நிர்ணயம் செய்தனர்; இந்த நேரத்தில், அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கிற்குச் சமமாக இருந்தது; ஆண்டுதோறும் வழங்கப்படும் பட்டா அல்லது குத்தகை ஆவணத்தில் மதிப்பிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட இந்த வரிக்கு விவசாயி பொறுப்பாளியாகக் கருதப்பட்டார்.
தட்பவெப்பநிலை சார்ந்த இயற்கைப் பேரிடர்களால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நிலத்தின் மீதான வரிச்சுமையைச் சுமப்பதற்காக, முழு கிராமத்தின்மீதும் விகிதாசாரப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது; ஒரு விவசாயி பட்டாவை ஏற்றுக்கொண்ட பிறகு, தனது நிலத்தைப் பயிரிட மறுத்ததன் மூலமோ, வேண்டுமென்றே பிடிவாதமாக இருந்ததாலோ அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்று நம்பப்பட்டால், அவருக்கு அபராதம் விதித்தோ அல்லது உடல் ரீதியான தண்டனை மூலமாகவோ தண்டிக்க கலெக்டருக்கு அதிகாரம் இருந்தது.
பட்டாவை நிறுத்தி வைப்பதற்கோ அல்லது வழங்குவதற்கோ உள்ள தனது முழுமையான அதிகாரத்தின்மூலம், கலெக்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்.” என மார்க்ஸ் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் எழுத்துகள் வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, அரசியல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது. தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழ் அரசுகளின் சிறப்புகளையும் சொல்வதாக உள்ளது. உலகையே மாற்றிய உன்னதத் தத்துவத்தைப் படைத்த மகத்தான சிந்தனையாளர் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பற்றி அறிந்திருந்தவர், ஆய்வு செய்தவர் என்ற விதத்திலும் கார்ல் மார்க்ஸின் சிலை தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டிருப்பது பொருத்தமானதேயாகும்.
கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
