தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிரிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Tamil Nadu govt allows euthanasia of stray dogs!
தமிழகத்தில் தொடர்ச்சியாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாய்கள் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிரிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
தெரு நாய்கள் விரட்டுவதால் வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. தெரு நாய்களின் தொல்லையால் பல சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் மட்டும் சுமார் 1,20,000 தெரு நாய்கள் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி அறிவுறுத்தலின் பேரில் தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது. பல இடங்களில் தெரு நாய்கள் பொது மக்களை துரத்தி கடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 1,259 பேரும், பிப்ரவரியில் 1,128 பேரும், மார்ச்சில் 1,344 பேரும், ஏப்ரலில் 1,212 பேரும், மே மாதம் 1,579 பேரும், ஜூன் மாதத்தில் 1,473 பேரும் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
இந்த ஜூலை மாதத்தில் மட்டும் முதல் 20 நாட்களில் 800 பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் உயிரிழப்பு!
தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் 3,65,318 ஆக இருந்த நாய்க்கடி சம்பவங்கள், 2023 ம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,24,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. நாய்க்கடிகளின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 2017-ல் 16 ஆக இருந்தது. 2024-ல் 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நோய் வாய்ப்பட்டு சுற்றித் திரியும் நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மூலம் நோய் வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும். நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்பட்ட நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நோய் வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய அனுமதி அளித்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.