பெண்களுக்கு ரூ.5,000- குவியும் பாராட்டுகள்.. அதிமுக, பாஜக விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

CM MK Stalin

தமிழக அரசு 1.31 கோடி கலைர் மகளிர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு இன்று (பிப்ரவரி 3) ரூ.5000 வரவு வைத்துள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலைக் காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக் கொண்டது நமது திராவிடமாடல் அரசு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு பின் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் வரவேற்றுள்ள நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு!

ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.O-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.” என தெரிவித்துள்ளார்

ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். நேரடி பணப் பரிமாற்றம் என்பது உலகளாவிய அடிப்படை வருமானம்(UBI) போன்றது. இந்த பணம் உள்ளூர் பகுதிகளிலும், அதைச் சுற்றியும் செலவிடப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும்.” என தெரிவத்துள்ளார்.

ஜோதிமணி எம்.பி தனது எக்ஸ் பதிவில், “ரூபாய் 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும்,எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.

ADVERTISEMENT

பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும்,கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும்,நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில வெளிப்படுத்த விரும்புகிறேன்.

மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பாஜக அதிமுக கூட்டணியின் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகள் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு, கடந்த 2021 மே மாதத்தில் இருந்து விடியல் பயணம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் உழைக்கும் பெண்கள் தினசரி 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து, சராசரியாக மாதம் ரூ.1,000 பயனடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2023 செப்டம்பர் 15-ம்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையல் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வங்கியில் முன் கூட்டியே செலுத்தி விட்டு, அந்த இனிய தகவலை காணொளி வழியாக அறிவித்திருப்பது அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் சமூக நீதி பார்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்வுடன் வரவேற்கிறது. ” என தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்… ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை.. இது தர்மத்திற்கு எதிரானது.அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு ஆக மட்டுமே செய்கிறார்கள் ஏனென்றால்.. சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை… இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் திமுக.

இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை?… அதுவே மக்களை ஏமாற்றுவது தானே… அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்?.. ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்… குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது… டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது.. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு.. எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள்.. ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும் ஏனென்றால் அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது இங்கு அப்படி இல்லை… அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் மோடி.

முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள்… அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு உடனே அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது..ஆக இந்த திமுக அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல் தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது… தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்…இதற்கு அடுத்தால் வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும்.. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல ஏற்கனவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ஏற்கனவே உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்..என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும்.. முதல்-அமைச்சர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார் நாடாளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “தேர்தலை காரணம் காட்டி ஒரு கையில் பணம் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பணம் பறித்து வருவாயைப் பெருக்க முயற்சிக்கிறது தமிழக அரசு. எனவே நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து வாக்குகளை பெற, ஆட்சி அதிகாரத்தால் மக்கள் படும் பல்வேறு துன்பங்களை மறைக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த செயல்பாட்டை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஏற்கனவே தி.மு.க அளித்த வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் இந்த அறிவிப்பானது மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தமிழக அரசு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக இன்றைய அறிவிப்பும் செயல்பாடும் அமைந்திருப்பதை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.” தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கி இருப்பது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை. கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை என்றும் தெரிவத்துள்ளார்.

முதலில் சொன்ன மின்னம்பலம்

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த 10-ந் தேதி, ”பெண்களுக்கு ரூ5,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்”என முதலில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இன்று பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share