சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 6) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 22ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் ஒவ்வொரு துறை சார்ந்த முன்னெடுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசு கொண்டு வந்துள்ள TAPS திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களை அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும்போது, கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை மாத ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
இதற்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வரும் நிதியாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு ஓய்வூதிய நிதிக்கு கூடுதலாக ரூ.13,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடி அரசு பங்களிப்பாக வழங்கப்படும்.
