இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ( செப்டம்பர் 13) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா 1975ம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் 8500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். இளையராஜாவின் இசை பயணம் தொடங்கி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையடுத்து இசை துறையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தமிழக அரசு இன்று அவருக்கு பொன்விழா கொண்டாடுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கான சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் பாராட்டு விழாவை நடத்தி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். துணைமுதல்வர் உதய நிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.
அமுதே.. தமிழே.. என்ற பாடலுடன் விழா தொடங்கியது. அதனை விஐபி வரிசையில் இருந்தபடி இளையராஜாவும் கமலும் சேர்ந்து பாடினார்.

அதன் தொடர்ச்சியாக ’மடை திறந்து தாவும் நதி அலை நான்’, ’அடி ராக்கம்மா கையத்தட்டு’, ’செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, ’அந்திமழை பொழிகிறது’, ’சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’, ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெதுவா’, ’ஒரு கிளி உருகுது’, ’ராஜா கைய வச்சா’, ’பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ உள்ளிட்ட இளையராஜாவின் ஹிட் பாடல்கள் பாடப்பட்டது.
அதில் பெரும்பாலான பாடல்களை மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடியிருந்த நிலையில், இன்று நடந்த விழாவில் அவரது மகன் சரண் அந்த பாடல்களை பாடி அனைவரையும் உருக வைத்தார்.

இதற்கிடையே ”இந்த விழாவில் பாடப்படும் பாடல்கள் அனைத்தும் என்னைப் போன்ற இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகரான நம் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பாடல்களின் லிஸ்ட்தான்” என நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் போட்டுடைக்க அரங்கில் இருந்த அனைவரும் ஆர்ப்பரித்து கைத்தட்டி மகிழ்ந்தனர்.