தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு அலுவகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அகற்றும் பணிகள் தொடங்கி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, 2026) அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் படம் அகற்றம்
தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தகவல் பலகைகளில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
அரசுத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகள் மற்றும் அரசு சாதனைகளைக் குறிக்கும் பதாகைகள் காகிதங்கள் கொண்டு மறைக்கப்பட்டு வருகின்றன. இனி புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது டெண்டர்களை விடவோ அரசுக்கு அனுமதி கிடையாது. தேர்தல் ஆணையத்தின் நேரடி மேற்பார்வையில் அரசு இயந்திரம் இயங்கும்.
தலைமைச் செயலகம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
பறக்கும் படைகள்
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சிகயர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கையும் தொடங்கியுள்ளது.
