ADVERTISEMENT

பாசிச பாசவலை: தமிழ்நாட்டு தேர்தலும், குடியரசின் எதிர்காலமும்

Published On:

| By Minnambalam Desk

Tamil Nadu Election 2026

ராஜன் குறை 

தமிழ்நாடு அரசியல் சூழலில் வட கிழக்கு பருவ மழைக்குப் போட்டியாக பாச மழை மொழிகிறது. புதிதாகக் கட்சி துவங்கியவர் குழந்தையைப் போல என்று கூறுகிறார் ஒருவர். அவர் பரீட்சை எழுத மூத்தவர்களின் துணையை நாட வேண்டும் என்று கூறுகிறார் இன்னொருவர். இந்த பாசவலையை பின்னுவதில் பாசிசம் முன்னணியில் இருக்கிறது.

அது என்ன பாசிசம் என்று பலருக்கும் கேள்வி எழும். இந்து மத அடையாளம் என்பதைப் பெரும்பான்மையாக்கி, அந்த பெரும்பான்மைக்கு எதிராக சிறுபான்மை மதங்களை நிறுத்தி சமூகத்தின் மற்ற முரண்கள், முற்போக்கான முரண்கள அரசியல் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்வதுதான் பாசிசம். அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்தத் துடிப்பது பாஜக. மத அடையாள முரணைத் தவிர வேறு எந்த முரணைப் பேசினாலும் அதற்குப் பிடிக்காது என்பதால் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் அர்பன் நக்ஸல் தீவிரவாதமாக அவர்கள் பார்வையில் மாறிவிடும். இந்த அரசியல் தமிழ்நாட்டில் புகத்துடிப்பது எத்தகைய தருணத்தில் என்பதை நாம் கவனமாக உள்வாங்க வேண்டும் 

ADVERTISEMENT

இந்தியக் குடியரசிற்கான திராவிட மாடல் 

அரை நூற்றாண்டுக் காலமாக தமிழ்நாடு தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்ற இருதுருவ அரசியலால் ஒரு நவீன மக்களாட்சி சமூகமாக உருவாகியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கினாலும் இந்த இரு கட்சிகளின் தலைமையில் கூட்டணிகளாகவே அவை தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரு கட்சிகளே தனித்து ஆட்சி அமைக்கின்றன. அண்ணாவின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த 1967-ஆம் ஆண்டினை கணக்கில் கொண்டால் திராவிட அரசாட்சியின் அறுபதாண்டுகாலம் நிறைவு பெறப்போகிறது.  

இந்த மாநிலத்தை, தமிழ் சமூகத்தை உலக அளவில் ஒப்பிட்டால், உலக நாடுகளின் மக்கள் தொகை பட்டியலில் இருபதாவது இடத்திலும், மொத்த உற்பத்தியில் முப்பத்தைந்தாவது இடத்திலும், தனி நபர் மொத்த உற்பத்தியில் 115-ஆவது இடத்திலும் விளங்குவதைக் காணலாம்.  

ADVERTISEMENT

மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் மொத்த உற்பத்தி. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால்தான் சரியான ஒப்பீடு கிடைக்கும். ஒரு உதாரணத்திற்கு தனியொரு வெளிநாட்டுடன் ஒப்பிட்டால் மொத்த உற்பத்தி, தனி நபர் மொத்த உற்பத்தி இரண்டிலுமே தன்னைப் போன்ற பண்டைய வரலாறு கொண்ட எகிப்தைவிட மேம்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்ளதைக் காணலாம். 

இந்திய மாநிலங்களில் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தனி நபர் மொத்த உற்பத்தியில் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. மொத்த உற்பத்தியில் முதலிடம் பெறும் மராத்திய மாநிலம், தனி நபர் மொத்த உற்பத்தியில் பதிமூன்றாம் இட த்தில்தான் இருக்கிறது என்பதைக் காணும்போது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று கூறலாம். 

ADVERTISEMENT

இந்த வளர்ச்சியையும், அரை நூற்றாண்டுக்கால அரசியல் நிலைத்தன்மையையும், மக்களாட்சியின் வெற்றியையும் பிரித்துப் பார்க்க முடியாது. குறிப்பாக பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் எப்படி மாநில மக்களின் வரலாற்றுத் தன்னுணர்வு, திராவிட தமிழர் என்ற அரசியல் தன்னுணர்வு இந்த வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்பதைத்தான். 

உதாரணமாக வட இந்திய மாநிலங்களையும், தென்னிந்திய மாநிலங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்த பிரின்ஸ்டன் பல்கலைகழக பேராசிரியர் பிரேர்ணா சிங், மொழி மற்றும் பண்பாட்டுத் தன்னுணர்வு கொண்ட தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களாட்சி ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படுவதே மக்கள் நல மேம்பாட்டில் காணப்படும் இந்த வித்தியாசத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார். 

மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சனும் The Dravidian Journey: Glimpses into Tamil Nadu’s Transformation to a Post Agrarian Society என்ற நூலிலும், வேறு பல கட்டுரைகள் உரைகளிலும் தமிழ்நாட்டு அரசியல் பொருளாதார வரலாற்றினை சிறப்பாக விளக்கியுள்ளார். கலையரசன் மற்றும் விஜய்பாஸ்கர் ஆகிய ஆய்வாளர்கள் The Dravdian Model: Interpreting the Political Economy of Tamil Nadu என்ற நூலில் விரிவாக விவாதித்துள்ளார்கள். 

Tamil Nadu Election 2026

தமிழ்நாட்டின் இந்த உதாரணம் இந்திய குடியரசின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. தன்னுணர்வும் சுயாட்சியும் கொண்ட மாநிலங்கள்தான் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியா வளம்பெற வழிகாட்ட முடியும். இந்தியாவின் முன்னணி அரசியல் சிந்தனையாளர் பார்த்தா சாட்டர்ஜி சென்ற ஜூலை மாதம் வெளியான தனது “For a Just Republic: The People of India and the State” என்ற நூலில் எப்படி மக்கள் தொகுதிகளே, அவற்றின் கூட்டாட்சியே தேச நலனை உறுதி செய்ய வல்லதேயன்றி, தேசிய அரசு மட்டுமே, அதன் அதிகாரக் குவிப்பு மட்டுமே அதனை செய்ய முடியாது என்பதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். 

Tamil Nadu Election 2026

அந்த நூலில் அவர் தமிழ்நாடு குறித்து எழுதும்போது நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், சுபகுணராஜன் ஆகியோருடன் இக்கட்டுரையாளரும் இணைந்து எழுதிய “Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967” என்ற நூலினை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி முரண்களம் உருவானதன் தன்மையை அதில் விளக்கியுள்ளதை எடுத்துக் கூறுகிறார். தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே வித்தட்ட காலம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சித்தாந்தத் தெளிவில் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காலம்தான் என்பதில் ஐயமிருக்க முடியாது. 

ஒற்றை தேசிய அரசா? கூட்டாட்சிக் குடியரசா? 

சுதந்திர இந்திய வரலாற்றின் அதி முக்கியமான, ஆதாரமான அரசியல் கேள்வி இந்தியா ஒற்றை தேசிய அரசா (unitary nation state) அல்லது சுயாட்சி கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசா (federal republic of autonomous states) என்பதுதான். இந்தியா ஒரே தேசமாக விளங்க வேண்டும் என்ற கவலை, அதனை ஒற்றை அரசாக பலரையும் நினைக்கச் செய்தது. மத அடையாள அடிப்படையில் பாகிஸ்தான் என்ற தனி நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து உருவானது, அரசியலமைப்பு சட்ட வரைவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் சிதறியிருந்த 565 குறுநில அரசுகளும், அதன் அரசர்களும் வேறு அப்போதுதான் இந்தியாவில் இணைந்திருந்ததும் தேச உருவாக்கத்தின் சவாலாக இருந்தது.  

இந்தப் பின்னணியில் வலுவான ஒன்றிய அரசு என்பது தேசத்தைச் சிதையாமல் காக்க இன்றியமையாததாகக் கருதப்பட்டது. மாநில அரசு என்பதே பிரிவினை சாத்தியத்தை உள்ளடக்கியதாக தேசிய அரசுவாதிகளுக்கு கவலையளித்தது. அதனால் மொழிவாரி மாநில உருவாக்கத்தையே தவிர்க்க பலர் நினைத்தார்கள்.     

இந்திய சுதந்திரப் போரை தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் முதல் இருபதாண்டுகள் ஒன்றிய அரசிலும், அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்ததால் மாநில சுயாட்சி உரிமைகள் முக்கியமான பிரச்சினை என்பது உணரப்படவில்லை.  ஆனால் மெல்ல, மெல்ல மாநிலங்களின் தனித்துவமிக்க அரசியல் களங்கள் தங்களை தகவமைத்துக் கொள்வதை காண முடிந்தது. மக்களாட்சி முரண் களங்கள் மாநில அளவில் மட்டுமே உருவாகுபவை.  

தெளிவாகச் சொன்னால் ஒரு கட்சி மாநிலக் கட்சியா, தேசியக் கட்சியா என்பதைவிட அரசியல் முரண் என்பது மாநில அளவிலானதா தேசிய அளவிலானதா என்பதே முக்கியமான கேள்வியாகும். இந்திய மாநிலங்கள் எல்லாம் தனித்துவமான நீண்ட நெடிய கால வரலாறு கொண்டவை. அவற்றின் சமூக பண்பாட்டு நிலப்பரப்புகள் அந்த ஈராயிரம், மூவாயிரம் ஆண்டு வரலாற்றின் செழுமையான வண்டல் மண்களாலானவை. அவற்றின் தனித்துவங்களே அவற்றின் வரலாற்று ஆன்மாவினை இயக்கவல்லவை. 

மூன்று அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று மாநில அளவில்தான் சாமானிய மக்கள், தலித் பகுஜன் எனப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்தப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு சாத்தியம் என்பதால் மாநில அரசியல் அடித்தட்டு மக்களுக்கு அணுக்கமாகவும், ஒன்றிய நாடாளுமன்றம் ஒன்றிய அரசு இயந்திரம் ஆகியவை 15% முன்னேறிய வகுப்பினரின், பார்ப்பன-பனியா கட்டுப்பாட்டிலும் இருக்க நேர்ந்தது. 

இரண்டு, பெருமுதலீட்டிய நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டு திரட்சிக்கு ஒன்றிய அரசில் அதிகாரம் குவிந்திருப்பது அதிகம் உதவுவதாக உள்ளதும், மாநில அரசுகள் சிறு, குறு தொழில்கள் சார்ந்த பொருளாதாரத்திற்கு அணுக்கமாக இருப்பதும் இயல்பானது. ஒற்றை தேசிய அரசு பெருமுதலீட்டிய அணுக்கத் தளம்.    

மூன்று, ஒன்றிய அரசு தேச பாதுகாப்பு என்ற காரணத்தினால் ராணுவம், உளவுத் துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மக்களாட்சி அதிகாரத்திற்கு வெளியே இயங்கும் எதேச்சதிகார அமைப்புகளைக் கொண்டு அரசியல் மேலாதிக்கத்தின் களமாக விளங்குவது. மனித உரிமை மீறல்களின் ஊற்றுக்கண் இதுதான். 

இவற்றையெல்லாம் முழுமையாகக் கருத்தில் கொண்டால்தான் ஏன் இந்தியா கூட்டாட்சிக் குடியரசாக முழுமையாக மலரவேண்டும் என்பதையும், ஒற்றை தேசிய அரசாக இறுகுவது ஆபத்தானது என்பதையும் முழுமையாக உள்வாங்க முடியும். 

2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்ற குடியரசின் வரலாற்றுத் தருணம் 

ஒவ்வொரு தேர்தலும், உலக, தேசிய வரலாற்றுப் போக்குகள் கட்டமைக்கும் தனித்துவமான தருணத்தில் நிகழ்கின்றன. அதை மறந்துவிட்டு முந்தைய கால தேர்தல்களையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய தேர்தலையும் ஒன்றே போல கருதுவது அரசியல் அறியாமை என்றுதான் கூற வேண்டும். சுருக்கமாக இந்திய அரசியல் வரலாற்றை தொகுத்துக்கொண்டால்தான் இன்றைய தருணம் என்ன என்பது நமக்குப் புரியும். 

காங்கிரஸ் கட்சியின் தேசியக் கட்டுமானம் தளர்வடைந்து, அதன் அரசியல் ஆற்றல் மாநில கட்சிகளாக உருமாறத் துவங்கியபோது, ஒன்றிய அரசில் கூட்டணி அரசுகள் ஆட்சியமைக்கத் துவங்கின. இதன் விளைவாக ஒன்றிய அரசில், அதன் நிறுவனங்களில் பிற்படுதப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரும் மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேறின. இதற்கு எதிர்வினையாக ஆர்.எஸ்.எஸ் அடித்தளம் கொண்ட பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒற்றை தேசிய அரசை, இந்துத்துவ அரசை வலியுறுத்த விரும்பியது. அதனால் உடனடியாக அதனை செய்ய முடியாததால் மாநில கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது. 

மாறிய நிலைமைகளை புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அரசிற்கு தயாரானவுடன் 2004 முதல் 2014 வரை பத்தாண்டு காலம் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. ஆனால் அந்த ஆட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி அலையை ஊடகங்கள் துணையுடன் உருவாக்கிய பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் 2014-ஆம் ஆண்டு ஆட்சியமைத்து இந்தியக் குடியரசை ஒற்றை தேசிய அரசாக மாற்றும் திசையில் நகர்த்தியது. மூன்று முக்கிய நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

முதல் நிகழ்வு, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதன்முறையாக காஷ்மீர் மாநிலத்தின் மாநில அரசுத் தகுதியைப் பறித்து அதனை ஒன்றிய பிரதேசமாக மாற்றியது மோடியின் தலைமையிலான பாஜக அரசு. இது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிவேரையே  கெல்லி எறிவதாகும். உச்ச நீதிமன்றமும் இதில் தலையிடாமல் போனதால், மாநில அரசு என்ற தகுதியே ஒன்றிய அரசின் தயவில் நீடித்திருக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இதைத்தொடர்ந்து எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுனர்களின் அத்துமீறிய அரசியல் தலையீடுகளை அரங்கேற்றுகிறது ஒன்றிய பாஜக அரசு. நிதிப்பகிர்வில் குறுநில மன்னர்களை விருப்பப்படி நடத்தும் பேரரசர்களைப் போல செயல்படுகிறது. தமிழ்நாட்டின் மீது மும்மொழிக் கொள்கையை திணித்து அண்ணா நிலைநிறுத்திய இருமொழிக் கொள்கையை கொன்று புதைக்கத் துடிக்கிறது. 

பொருளாதார நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்ற முற்றிலும் மானுடவியல் தர்க்கமற்ற, அபத்தமான சட்டத்தை வாக்கு வங்கி அரசியலைக் காட்டி மிரட்டி நிறைவேற்றியது பாஜக. இது சமூக நீதி தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வெடி மருந்தாகும். காலப்போக்கில் இது இட ஒதுக்கீட்டையே பலவீனப்படுத்தி அப்புறப்படுத்துவதற்கு போடப்பட்ட அச்சாரம் எனலாம். ஏனெனில் இந்த ஒதுக்கீட்டின் விளைவுகள் மோசமாக உள்ளன.

குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்ற பெயரில், மத அடையாளத்தையும், குடியுரிமையையும் பிணைக்கும் தந்திரமான முகாந்திரத்தை உருவாக்கியுள்ளது பாஜக. தேசிய குடியுரிமை பதிவேடு என்பதை அது நடைமுறைப் படுத்தினால் அப்போது இந்த சட்டம், பலர் குடியுரிமையை பறிக்கும், இரண்டாம்தர குடிமக்களாக்கும் நிலைக்குக் கொண்டு செல்லக்கூடும் என்பது பலரது அச்சமாக உள்ளது. பீஹாரில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் குடியுரிமை சரிபார்ப்பினை துவங்க முயன்றது பாஜக.  

இப்படியாக பல பாசிச முன்னெடுப்புகளை மிகத் தெளிவாக மேற்கொண்டு வருகிறது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்தியக் கூட்டாட்சி குடியரசின் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியுள்ளது எனலாம். 

தி.மு.க அதன் துவக்கத்திலிருந்தே கூட்டாட்சிக் குடியரசையும், மாநில சுயாட்சியையும், மாநில உரிமைகளையும் கடுமையாக வலியுறுத்தி வருவதால், பண்பாட்டு ரீதியாக ஆரிய சமஸ்கிருத மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழ் பண்பாட்டு விழுமியங்களை நிறுத்தி வருவதால் அது பாஜக-வின் முக்கிய எதிரியாக விளங்கி வருகிறது. 

அதன் சிறப்பான நிரூபணங்களாக தி.மு.க காஷ்மீரின் மாநில தகுதி நீக்கத்தை எதிர்த்து டில்லியில் அனைத்துக் கட்சி கூட்ட த்தை நிகழ்த்தியது. பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தது. குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தது. ஆரியம் எந்த வடிவம் எடுத்தாலும் அதன் மாயையில் தி.மு.க சிக்குவதில்லை. 

தமிழ்நாட்டு முரணரசியலும், பாஜக பாசிசமும்  

தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க என்ன நினைக்கிறது என்றால் மாநிலத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதும், தேர்தலில் மோதுவதும் அதன் உரிமை என்று நினைக்கிறது. அது மாநில முரணரசியலில் இயல்பானதுதான். வெகுஜன அரசியலில் ஆட்சியின் குறை, நிறைகளை அலசுவதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் தி.மு.க ஆட்சியை கடுமையாகச் சாடுகிறது. மாநிலமே சீரழிந்து போகிறது, தி.மு.க ஆட்சியை எப்பாடு பட்டாவது அகற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகிறது. அதையும் தேர்தல் கள சொல்லாடல் என்று ஏற்கலாம். 

பிரச்சினை என்னவென்றால் இந்திய குடியரசின் எதிர்காலத்தை பாஜக எப்படி பாசிசப் படுகுழியில் தள்ள முயல்கிறது என்பதை அ.இ.அ.தி.மு.க எதிர்கொள்ள மறுக்கிறது. வெளிப்படையாகவே ஒன்றிய பாஜக அரசு ஒற்றை தேசிய அரசாக உருமாறி வருவதை அது புரிந்துகொள்வதில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்ய பாஜக உதவியதாக அவர் நன்றியுடன் கூறுகிறார். ஆனால் அந்த காலகட்ட த்தில் பாஜக எடுத்த அனைத்து பிற்போக்கு, பாசிச முன்னெடுப்புகளுக்கும் அவர் துணைபோனதை ஏற்க மறுக்கிறார். பழனிசாமி மாநிலத்தில் அவர் ஆட்சி செய்வதுதான் முக்கியமே தவிர, இந்தியக் குடியரசு எப்படிப்போனாலும் பிரச்சினையல்ல என்று நினைக்கிறார். தேசிய அரசியலை பேசுகின்ற பழக்கமே அ.இ.அ.தி.மு.க தலைவர்களுக்கு இருப்பதில்லை. 

பழனிசாமி தலைமை பலவீனமாக இருப்பதால், அ.இ.அ.தி.மு.க கட்சி பாஜக-வால் பிளக்கப்பட்டு இருப்பதால் முன்னணி திரைப்பட நடிகரான விஜய் அரசியல் கட்சி துவங்கி தமிழ்நாட்டு முதலமைச்சராக விருப்பம் கொண்டார். அ.இ.அ.தி.மு.க-வுக்கு மாற்றாக தன்னை நிறுவிக்கொள்ள தி.மு.க எதிர்ப்பே முக்கியம் என முடிவு செய்துகொண்டார். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவே இல்லை. தமிழ்நாட்டு வாக்காளர்களை, குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்களைக் கவர, ஒரு பேச்சுக்கு பாஜக கொள்கை எதிரி என்று சொல்லிக்கொள்கிறார். என்ன கொள்கை, எதை எதிர்க்கிறார் என்று எதிலும் தெளிவில்லை. ஆனால் முதலமைச்சர் பதவியே குறி என்பதால் தி.மு.க-வை கடுமையாக எதிர்க்கிறார். 

இந்த நிலையில்தான் பாசிசம் பாசவலை விரிக்கிறது. சிலந்தி வலை பின்னி பூச்சிகளைப் பிடிப்பது போல எடப்பாடி பழனிசாமியையும், விஜயையும் பிடிக்கிறது. விஜயின் கூட்டக்காட்சி அரசியல் மோகத்தால் கரூரில் மக்கள் கூட்ட நெருக்கடியில் மரணமடைந்த துயர நிகழ்வை பயன்படுத்தி, வெளிப்படையாக அவரை தன் பிடிக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. வரும் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும், எடப்பாடி மற்றும் விஜய் ஆதரவுத் தளங்களை ஊடுறுவுவதன் மூலம் தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் என முயல்கிறது. 

இதையெல்லாம் உள்வாங்கும் ஒருவருக்கு தெளிவாக ஒன்று புரியும். அடுத்த ஆண்டு நடக்கும் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்வார்கள் என்பது குறித்தது மட்டுமல்ல: இந்திய குடியரசின் எதிர்காலம் என்னவாகும் என்பதைக் குறித்ததும்தான். தமிழ்நாட்டின் நலன் என்பது இந்திய கூட்டாட்சிக் குடியரசின் மலர்ச்சியில்தான் அடங்கியுள்ளது என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதில் ஐயமில்லை. 

தேசிய வரலாற்றுப் பின்னணியை மறைத்துவிட்டு இது மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமே என்று ஒரு சொல்லாடலை உருவாக்குவதில்தான் பாசிச பாசவலையின் வெற்றி அடங்கியுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தை வகுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பாசிசத்தின் பாசவலையில் எதிர்கட்சிகள் விழுந்தாலும், மக்கள் ஓரணியில் திரள்வார்கள் என்பதே வரலாறு தரும் வெளிச்சம்.  

 கட்டுரையாளர் குறிப்பு: 

Tamil Nadu Election 2026 - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share