கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் சிலர் பொதுவெளியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசி வருவது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

கடந்த 2004 இல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை, 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தான். அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பா.ஜ.க., தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் தி.மு.க.வுடன் முதற்க

ADVERTISEMENT

அகில இந்திய அளவில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பின்னால் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பா.ஜ.க.வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் மிகப்பெரிய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறார்கள். இத்தகைய அரசியல் பின்னணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதை கொள்கை ரீதியாக சிந்தித்து செயல்பட வேண்டுமென காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share