முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 14-ந் தேதி நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லை கவின் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான சிபிஎம் சண்முகம், சிபிஐ முத்தரசன், விசிக திருமாவளவன் எம்பி ஆகியோர் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டாகவும் மனு அளித்திருந்தனர். இது பற்றி அரசு பரிசீலனை செய்யும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதனால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவது பற்றிய ஆலோசனை நடைபெறக் கூடும் என்கின்றன தகவல்கள்.