2026ம் ஆண்டில் முதல் அமைச்சரவை கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் 2026ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முன்னதாக முதல்வர் தலைமையில் கூட்டப்படும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆளுநர் உரையில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
2026ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கையை முன் வைத்து ஜனவரி 6ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
