தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் உத்தேசமாக மார்ச் 30-ந் தேதி நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
1961-ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனி பார் கவுன்சில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலிலும் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சிலர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பார் கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர்கள் இணைந்து அகில இந்திய பார் கவுன்சில் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாநில பார்கவுன்சிலின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 2015-ம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில், Certificate of Practice நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதாவது பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யும் அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்; மேலும் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் ஒரு வக்காலத்து தாக்கல் செய்திருக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது.
இந்த நடைமுறையால் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய பார் கவுன்சில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2018-ல் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அளவில் இந்த பார் கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக் காலம் 2023-ல் முடிவடைந்தது. குறிப்பாக தமிழகத்தில் 2024-ம் ஆண்டு ஜூலையில் பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக் காலம் முடிவடைந்தது.
2023-ல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் விதி 32-ல் திருத்தம் ஒன்றை ஏற்படுத்தி அனைத்து மாநிலங்களிலும் பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவிக் காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்தது. குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பு முடியும் வரை இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த திருத்தமானது முற்றிலும் சட்டத்துக்கு முரணானது மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படையில் தமிழகத்தின் மூத்த பார் கவுன்சில் உறுப்பினர் வரதன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் பார்கவுன்சில்களுக்கு தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் மூத்த வழக்கறிஞர் வரதன் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் மற்றும் தமிழக உறுப்பினர் எம். வேல்முருகன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இவ்வழக்கில் கடந்த 18.11.2025-ந் தேதியன்று, சான்றிதழ் சரிபார்த்த பின்புதான், மாநில பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது.
மேலும், அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களையும் 5 கட்டங்களாக 30.4.2026-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த தேர்தலை நடத்துவதற்கு அகில இந்திய அளவில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதான்ஷு துலியா தலைமையில் Supervisory Committee அமைத்தது. மேலும் மாநிலங்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளை High Powered committee-களாக நியமித்தது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி Rajiv Shakdher– ஐ நியமித்து 5-ம் கட்டமாக மாநில பார் கவுன்சில் தேர்தலை 30.04.2026-க்குள்ளாக நடத்தி முடிவுகளும் அறிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், கேரளாவைச் சேர்ந்த அமித் ஜார்ஜ் ஆகியோரை High Powered committee உறுப்பினர்களாக நியமித்தார் Rajiv Shakdher.
இந்நிலையில் பார் கவுன்சில் செயலாளர் 06.12.2025 அன்று தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும், Certificate of Practice மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது கற்றறிந்த வழக்கறிஞர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சுற்றறிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு பார் கவுன்சில் உறுப்பினர்களும் வழக்கறிஞர்களும் கோரி இருந்தனர். இது குறித்து உச்சநீதிமன்றம் நியமித்த High Powered committee-க்கு மனு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜனவரி 18-ந் தேதி High Powered committee சென்னைக்கு வருகை தந்தது. சென்னையில் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியது இந்த குழு. அப்போது, தேர்தலை ஒத்திவைக்க சிலர் முயற்சிகள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் உடனே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவானது உத்தேச தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் அறிவிக்கை (Notification) ஜனவரி 31-ந் தேதி வெளியிடப்படும்; பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 30-ந் தேதி நடைபெறும். வாக்களிக்கும் தகுதி பெற்ற வழக்கறிஞர்கள் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்பட்டு இக்குழு பரிந்துரைகளை கொடுத்துள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Certificate of Practice குறித்த குழப்பங்களையும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை தவிர்க்கும் வகையிலும் வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
