‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. Tamil Maanila Bahujan Samaj Porkodi
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
அண்மையில் பொற்கொடியின் கட்சி பதவியை பறித்த பகுஜன் சமாஜ் கட்சி, குழந்தைகளைப் பார்த்து கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால் கொந்தளித்துப் போனார் பொற்கொடி.
இதனையடுத்து நடிகர் விஜய்யின் தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார் பொற்கொடி. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.
இது தொடர்பாக தமது ஆதரவாளர்களுடன் பொற்கொடி அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தனிக் கட்சி தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
இதை “கைவிரித்த அதிமுக, தவெக.. ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி தொடங்கும் மனைவி பொற்கொடி” என ஜூன் 21-ந் தேதி நமது மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.
இந்த பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள இன்று ஜூலை 5-ந் தேதி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற தனிக் கட்சியை தொடங்கியதாக அறிவித்துள்ளார் பொற்கொடி. இந்த கட்சியின் கொடியையும் பொற்கொடி அறிமுகப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார் பொற்கொடி.
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம், இந்த புதிய கட்சியின் கொடியிலும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் பொற்கொடி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.